TOP 10 NEWS: ‘சாம்சங் தொழிலாளர் போராட்டம் முதல் TNPSC பணியிடங்கள் நீட்டிப்பு வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
Oct 09, 2024, 07:37 PM IST
TOP 10 NEWS: சாம்சங் ஊழியர்கள் போராட்டம், டிஎன்பிஎஸ்சி பணியிடங்கள் நீட்டிப்பு, குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு, சாம்சங் ஊழியர்கள் 2 பேர் கைது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
1.குற்றாலத்தில் குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
2.டி.என்.பி.எஸ்.சி பணியிடங்கள் நீட்டிப்பு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்களில் கூடுதலாக 2.208 இடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் குரூப் 4 காலி பணியிடங்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932 ஆக அதிகரிப்பு.
3.சாம்சங் ஊழியர்கள் போராட்டத்திற்கு தடை இல்லை
சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடை இல்லை. சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சிஐடியு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்த நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
4.சாம்சங் ஊழியர்கள் 2 பேர் கைது
காஞ்சிபுரம் சுங்குவார் சத்திரம் பகுதியில் நடைபெற்ற சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் காவல் ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் சாம்சங் ஊழியர்கள் எலன் மற்றும் சூரிய பிரகாஷ் ஆகியோருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவு.
5.சாம்சங் தொழிலாளர்களுக்கு விசிக ஆதரவு
சாம்சங் தொழிலாளர்கள் அமைதியாக போராடிய நிலையில் வழக்கு போடப்பட்டு உள்ளது. வழக்கை அரசு திரும்பப் பெற வேண்டும். சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் வைக்க அனுமதிக்காதது அடக்குமுறை; அதன் அடக்குமுறையை எதிர்க்கிறோம் என சாம்சங் தொழிலாளர்களை சந்தித்த பின்னர் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.
6.தமிழக மீனவர்கள் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்த புகாரில் தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்து உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 21 பேர் 4 விசைப்படகுகள் உடன் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
7.உதயநிதி ஸ்டாலின் மீது விமர்சனம்
உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆகவும், செந்தில் பாலாஜியை அமைச்சராகவும் ஆக்கியது திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை பேட்டி.
8.சாம்சங் போராட்டம் குறித்து கருத்து
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தை முடக்கும் வகையில், அவர்களின் போராட்ட பந்தலை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர் இரவோடு, இரவாக அகற்றியிருப்பதும், தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு சட்டவிரோதக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து.
9.புதிய பேருந்துகள் இயக்கம்
மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 22.69 கோடி ரூபாய் மதிப்பிலான 25 புதிய BS-VI தாழ்தள பேருந்துகளின் இயக்கத்தை, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள், கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள்.
10.அதிமுக நிர்வாகி மீது திமுகவினர் தாக்குதல்
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் பேரூராட்சி அலுவலகத்தில் புகுந்து அதிமுக செயலாளர் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல். நேற்று நடைபெற்ற அதிமுக மனித சங்கிலி போராட்டத்தில் பேரூராட்சியில் ஊழல் நடப்பதாக போகர் ரவி பேசிய நிலையில், திமுக மாவட்ட பொருளாளரும், பேரூராட்சி தலைவரின் கணவருமான அலெக்சாண்டர் மற்றும் அவரது சகோதரர் அன்புச்செழியன் உட்பட 7 பேர் தாக்கியதாக குற்றச்சாட்டு.
டாபிக்ஸ்