தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணை ரத்து!
Jul 06, 2022, 02:49 PM IST
அரசு பணிகளுக்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி மேற்கொள்ள இருப்பதால், மின்சார வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்புதவதற்கான வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர், கள உதவியாளர், உதவி கணக்கு அலுவலர் உள்Hட காலியாக உள்ள 5, 318 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. ஆனால் அதனை ரத்து செய்வதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருந்த தேர்வுகள் கொரோனா தொற்று காரணமாகவும், சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றதாலும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
அரசு நிறுவனங்களில் ஆள்சேர்ப்பு அனைத்தையும் டிஎன்பிஎஸ்சி மேற்கொள்ளும் என்ற அறிவிப்பு நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மின்வாரியத்தில் ஆள்சேர்ப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
கணினி வழி தேர்வுகளும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த பணிகளுக்காக விண்ணப்பித்தவர்கள் செலுத்திய கட்டணம் முழுவதுமாக அவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.