Senthil Balaji Case: 41வது முறையாக காவல் நீட்டிப்பு..செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி பிறப்பித்த புதிய உத்தரவு என்ன?
Jun 26, 2024, 02:26 PM IST
Senthil Balaji Case: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 1 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
Senthil Balaji Case: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 1 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணை முடிந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
இந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்றக் காவலில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
41வது முறையாக காவல் நீட்டிப்பு
இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (ஜூன் 25) முடிவடைவடைந்தது. இதையடுத்து புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 1ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 41-வது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய மனுக்கள் மீது விசாரணை
இதற்கிடையில், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுக்கள் மீதான விசாரணையையும் ஜூலை 1ஆம் தேதிக்கு நீதிபதி அல்லி தள்ளிவைத்துள்ளார்.
நடந்தது என்ன?
கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு தேவசகாயம் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பெயர் அதில் இடம் பெறவில்லை. 2016 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மோசடி வழக்குப்பதிவு
தொடர்ந்து முறைகேட்டு புகாரின்படி, செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு சம்மனும் அனுப்பியது. ஆனால், உயர் நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. இருப்பினும் வழக்கு விசாரணை தொடர்ந்து வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் செந்தில் பாலாஜி. அதே ஆண்டில் உச்ச நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை, சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை எனக் கோரிக்கை வைத்தது. 2022 ஆம் ஆண்டு, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜியும் உச்ச நீதிமன்றத்தையும் நாடினார். இந்த வழக்குகளை 2 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்