Tirunelveli Mayoral Election: நெல்லை மேயர் தேர்தல்! திமுக தலைமைக்கு நெருக்கடி! கோதாவில் குதித்தார் பவுல்ராஜ்!
Aug 05, 2024, 03:15 PM IST
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக தலைமை தேர்வு செய்த கிட்டுவை எதிர்த்து பவுல்ராஜ் வேட்புமனுத்தாக்கல் செய்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக தலைமை தேர்வு செய்த கிட்டுவை எதிர்த்து பவுல்ராஜ் வேட்புமனுத்தாக்கல் செய்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில் 50 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. அதிமுக 4 வார்டுகளையும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்று இருந்தனர்.
நெல்லை மாநகராட்சி மேயர் ராஜினாமா
நெல்லை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் இருந்தார். அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து அவருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் பலமுறை மாநகராட்சி கூட்டங்களை கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
மேயரிடம் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
முன்னதாக ஆளும் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களே மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கடிதத்தை கமிஷனரிடம் கவுன்சிலர்கள் வழங்கினர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. மூத்த அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் மாநகராட்சிக்கு நேரில் சென்று அனைவரையும் சமாதானப்படுத்தினர்.
ஆனால் தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர்கள் இடையே மோதல் போக்கு நிலவிய நிலையில் மேயர் சரவணன் கடந்த மாதம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேயர் வேட்பாளர் ஆன ராமகிருஷ்ணன்
இந்த நிலையில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் என்கிற கிட்டு அறிவிக்கப்பட்டு உள்ளார். அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற திமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து கிட்டுவின் பெயர் அறிவிக்கப்பட்டது.
மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறும் என்று அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை பவுல்ராஜ் என்பவரும் வாங்கி உள்ளார். இருப்பினும் திமுக தலைமை அறிவித்த மேயர் வேட்பாளர் ஆன கிட்டுவுக்கே பெரும்பான்மை கவுன்சிலர்களின் ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த கிட்டு?
நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளர் ஆன கிட்டு என்கிற ராமகிருஷ்ணன், தொடக்க கல்வி வரை மட்டுமே படித்தவர். இவர் நெல்லை மாநகராட்சியின் 25வது வார்டு திமுக கவுன்சிலர் ஆக உள்ளார். தொடர்ந்து 3ஆவது முறையாக கவுன்சிலர் ஆக உள்ள அவர், கள அரசியல் மற்றும் மாநகராட்சி பணிகளில் மிகுந்த அனுபவம் கொண்டவர். 5 கி.மீ பயணம் வரை சைக்கிளிலும், அதற்கும் மேல் உள்ள பயணங்களை ஆட்டோவிலும் பயணம் செய்வது இவரது வழக்கம் ஆகும். இவருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் மத்தியில் ஆதரவு உள்ளதாக கூறப்படுகின்றது.
25 மாநகராட்சிகள்
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம், திருப்பூர், திருநெல்வேலி, ஈரோடு, வேலூர், கடலூர், கரூர், ஒசூர், தூத்துக்குடி, நாகர்கோயில், காஞ்சிபுரம், சிவகாசி, தஞ்சாவூர், கும்பகோணம், திண்டுக்கல், தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகள் உள்ளன. புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய நகராட்சிகள் புதிய மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் உள்ள 25 மாநகராட்சி பகுதிகளில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கவுன்சிலர்கள் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர்.
டாபிக்ஸ்