Tirupur: சமுதாய நலக்கூடம் இடிந்து விழுந்து 3 இளைஞர்கள் பலி ..திருப்பூரில் பரபரப்பு!
Oct 16, 2023, 11:59 AM IST
திருப்பூர் உடுமலை அருகே சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்துக்காக காத்திருந்த போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கொழுமம் பகுதியில் சமுதாய நலக்கூடம் உள்ளது. இப்பகுதி பேருந்து நிறுத்தமாகவும் உள்ளது. இதனால் காலை முதல் இரவு வரை அப்பகுதி மக்கள் சமுதாய நலக்கூடம் முன்பு பேருந்துக்காக காத்து நின்று உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.
இந்த சூழலில், இன்று (அக்.16) காலை கொழுமம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளர்களான மணிகண்டன் ( 28), கவுதம் (29), முரளிராஜன் (35) ஆகியோர் வேலைக்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்துள்ளனர்.
இந்த நிலையில் உடுமலை பகுதியில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பழுதடைந்த நிலையில் இருந்த சமுதாய நலக்கூடத்தின் முன்புற ஸ்லாப் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், எதிர்பாராத விதமாக அங்கு நின்று கொண்டிருந்த 3 இளைஞர்களும் சிக்கி உயிருக்கு போராடினர்.
இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனே மூன்று பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. உடனே இது குறித்து குமரலிங்கம் காவல் நிலையம் உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரையும் மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளை அகற்றி அடியில் சிக்கியிருந்த மூவரையும் மீட்டனர். ஆனால், 3 பேரும் மூஞ்சு திணறி சம்பவ இடத்திலே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேலைக்கு செல்வதற்காக பேருந்துக்காக ஒதுங்கி நின்ற 3 தொழிலாளர்கள் மேற்கூரை இடிந்து பலியான சம்பவம் உடுமலை பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குமரலிங்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.