Senthil Balaji: "அமைச்சர்களை பதவியில் அமர்த்த அதிகாரம் உள்ள ஆளுநருக்கு 'நீக்கவும்' அதிகாரம் உண்டு”- கிருஷ்ணசாமி
Jun 30, 2023, 01:18 PM IST
Dr.Krishnaswamy: அவரை அமலாக்கத்துறை தனது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துவிட்டால் அவர் தமிழகத்திலிருந்து டெல்லிக்கும் மாற்றப்படலாம்; அமலாக்கத் துறையின் பிடியில் இருந்து எவரும் எளிதில் பிணையும் பெற முடியாது; வெளியிலும் வர முடியாது;
அமைச்சர்களை பதவியில் அமர்த்த அதிகாரம் உள்ள ஆளுநருக்கு நீக்கவும் அதிகாரம் உள்ளது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வரும் செந்தில் பாலாஜியைப் பொறுப்பிலிருந்து, நீக்கி உத்தரவிட்ட தனது அறிவிப்பை நேற்று நள்ளிரவு வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார். கடந்த ஜூன் 13 ஆம் தேதி அமலாக்கத்துறை விசாரணை, அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள பாலாஜியின் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் உத்தரவிட்டது செல்லுபடி ஆகுமா? ஆகாதா? சட்டப்பூர்வமானதா? சட்ட விரோதமானதா? அவருக்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என்ற நியாயமான விவாதங்களும்; ஆளுநருக்கு எதிரான திமுகவின் அநியாயமான, அராஜகமான 'கோயபல்ஸ் பிரச்சாரம்' போஸ்டர் வடிவத்திலும் நேற்றே துவங்கப்பட்டு விட்டது.
அட்வகேட் ஜெனரல் அவர்களின் ஆலோசனையைப் பெறவே ஆளுநர் தனது உத்தரவை நிறுத்தி வைத்திருக்கிறார் என சொல்லப்பட்டாலும் கூட அந்த முக்கியமான அறிவிப்பு கொடுப்பதற்கு முன்பாகவே ஆலோசனை நடத்தி இருந்தால் வீணாக எதிர் பிரச்சாரத்திற்கு வாய்ப்பு கொடுக்காமலிருந்திருக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இது போன்ற ஒரு சிக்கலான காலகட்டங்களில் சிறு சிறு குழப்பமான நடவடிக்கைகள் இருப்பினும் ஆளுநர் அவர்களின் நோக்கத்தையும் நடவடிக்கையும் குற்றம் சொல்ல முடியாது.
இந்தியாவின் அரசியல் சாசனத்தின் எந்த வானளாவிய அதிகாரம் வழங்கப்படவில்லை. ஒரு அது அதிகாரம் மையத்திற்கும் ஆளுநருக்கு பொருந்தும்;
அமைச்சரவைக்கும் பொருந்தும். நாடாளுமன்றங்கள், சட்டமன்றங்கள், நீதிமன்றங்கள் மற்றும் நிர்வாக அமைப்புகள் அனைத்துமே ஒன்றோடு ஒன்று இணைந்து 'Checks and Balance' என்ற அடிப்படையிலேயே செயல்பட வேண்டும் என்பதே இதன் அடிப்படை அம்சமாகும்.
மக்கள் வாக்களித்து விட்டார்கள்; சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டோம்; அமைச்சர்கள் ஆகிவிட்டோம் என்று சொல்லி எவரும் இந்திய அரசின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்படவோ, நீதி தவறி மக்களின் சொத்துக்களை கபளீகரம் செய்யவோ அதிகாரமில்லை. குற்றம் இழைப்பதற்கு இந்திய அரசியல் சாசனம் எவ்விதமான உரிமையையும் எவருக்கும் வழங்கவில்லை. நீதி தவறியவர்களை தண்டிப்பதற்கு என்று தான் அனைத்து அமைப்புகளும் இருக்கின்றன.
செந்தில் பாலாஜி தனது 'அமைச்சர் பதவியை' பயன்படுத்தி தன்னுடைய சுயலாபத்திற்காகக் கையூட்டு பெற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் உட்பட பலவித முறைகேடுகளின் காரணமாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு, உடல் நிலையைக் காரணம் காட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது எத்தனை வழக்குகள், என்னென்ன வழக்குகள், எப்படிப்பட்ட வழக்குகள் இருக்கின்றன என்பது அவரை விசாரிக்கும் அமலாக்கத்துறைக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும். அவர் மட்டுமல்ல, அவருடைய தொடர்புடைய பலரையும் விசாரணைக்கு ஆட்படுத்தவும், தேவைப்பட்டால் கைது செய்யப்பட வேண்டிய சூழ்நிலைகளும் உள்ளன.
ஜனநாயகம் என்பது "Of the people; For the people; By the people" அதாவது மக்களால் - மக்களுக்காக மக்களாலேயே வழிநடத்தப்படுவதே ஆகும். அதற்கான கருவிகள் தான் நாடாளுமன்றங்களும் சட்டமன்றங்களும். 'மக்களுக்காக பணியாற்றுவோம்' என்று ரகசிய பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒருவர் மக்களுக்காக பணியாற்றாமல் தன்னை வளர்த்துக் கொள்வதற்காக அந்த பதவியைப் பயன்படுத்திய போது அது கிரிமினல் குற்றமாகிறது.
செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு 2011 ஆம் ஆண்டு அவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவர் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டாகும். கடந்த காலங்களிலும் அமைச்சர்' என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தியே விசாரணை - கைது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை தவிர்த்து வந்திருக்கிறார். திமுக ஆட்சியில் அமைச்சராக பொறுப்பேற்றப் பிறகும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தியே அவர் மீதான சட்டபூர்வ நடவடிக்கைகளைத் தடுத்து வந்துள்ளார்.
உச்சநீதிமன்றம் அவர் மீதான விசாரணையைத் தொடர்ந்திட வேண்டும்; மாநில அரசிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை எனில், அமலாக்கத் துறையே நேரடியாக அவர் மீது விசாரணையை மேற்கொள்ளலாம் என்று பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே தகுந்த ஆதாரங்களைக் கொண்டு அவரை கைது செய்திருக்கிறது. இவர் மீது கடந்த ஆட்சியில் செய்த ஊழல் குற்றச்சாட்டு மட்டுமல்ல, இவர் மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, டாஸ்மாக் மூலமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்த குற்றச்சாட்டுகளும் உண்டு. டாஸ்மாக்கில் குவித்த பெரும் தொகையை ஹவாலா மூலமாக பண பரிமாற்றம் செய்த ஆதாரங்களும் அமலாக்கத் துறையிடத்தில் கிடைத்ததன் அடிப்படையிலேயே பாலாஜி மீதான விசாரணை வளையம் என்பது பெரிதாகிக் கொண்டே போகிறது.
ஒரு அமைச்சரவை மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளிலிருந்து விலகி மக்களுக்கு எதிரான அதிகார அமைப்பாகச் செயல்பட முடியாது. தாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பது போன்ற உணர்வுடன் முதலமைச்சர் உட்பட எவ்வித அமைச்சரும் செயல்படக்கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது பேச்சளவில் மட்டுமல்ல, அது நிதர்சனமான உண்மையாகவும் இருக்க வேண்டும். தனது சக அமைச்சர் மீது விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட அடுத்த நொடியே தார்மீக அடிப்படையில் அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்து இருந்தால் இந்த அரசு குறைந்தபட்ச ஜனநாயகம் மாண்புகளோடு செயல்படுகிறது; முதல்வர் சட்டத்தை மதிக்கிறார் என்று எண்ணலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் இரண்டு மாத காலக் கெடு முடிவடையும் தறுவாயில், வேறு வழியின்றி உச்சநீதிமன்ற மன்றத்தில் பிடியாணை பெற்று அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை விசாரணை செய்யவும், கைது செய்யவும் நேர்ந்துள்ளது. அவரை கைது செய்தவுடனாவது முதலமைச்சர் விரைந்து செயல்பட்டு அவரை பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதைப் போல 'தான் நினைக்கக் கூடியவர்களை அமைச்சராக்க முடியும்; தான் நினைத்தால் மட்டுமே அமைச்சர் பொறுப்பில் வந்து நீக்க முடியும்' என்று தவறான வழிகாட்டுதலின் அடிப்படையில் முதல்வர் செந்தில் பாலாஜியைப் பதவி நீக்கம் செய்யாமல் அவர் வகித்த துறைகளை மட்டும் மாற்றிவிட்டு, இலாகா இல்லாத அமைச்சராக வைத்துள்ளார். இதுவே ஒரு மரபு மீறலும், சட்ட விரோதமும், மக்கள் விரோதமும் ஆகும்.
செந்தில் பாலாஜி மீதான வழக்கு எத்தனை மாதம் நீடிக்கும் என்று எவராலும் சொல்ல இயலாது. அவரை அமலாக்கத்துறை தனது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துவிட்டால் அவர் தமிழகத்திலிருந்து டெல்லிக்கும் மாற்றப்படலாம்; அமலாக்கத் துறையின் பிடியில் இருந்து எவரும் எளிதில் பிணையும் பெற முடியாது; வெளியிலும் வர முடியாது; ஆறு மாதமும் ஆகலாம். ஒரு வருடமும் ஆகலாம். செந்தில் பாலாஜி மீது புதிய புதிய வழக்குகள் வருகின்ற பொழுது அதற்கான விசாரணையும் நீடித்துக் கொண்டே போகலாம். இது குறித்து முதல்வருக்கு உரியச் சட்ட விசாரணை வழங்கினார்களா? இல்லையா? என்று தெரியவில்லை. ஏற்கனவே, கடந்த காலங்களில் அந்த அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி தான் மாநில ஊழல் தடுப்பு அதிகாரி விசாரணையிலிருந்து தப்பித்து வந்துள்ளார். இப்பொழுது இலாகா இல்லாவிட்டாலும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடித்தால் அவர் தலைமைச் செயலகத்திற்கு செல்ல முடியும்; அதிகாரிகளை மறைமுகமாக மிரட்டி தன் வசப்படுத்திக் கொள்ள முடியும்; தலைமைச் செயலகத்திலுள்ள அவரது அலுவலகத்திலிருந்து அமலாக்கத்துறையால் எடுக்கப்பட்ட ஆதாரங்களைக் கூட அவர் அழிக்கவோ அல்லது அதிலிருந்து தப்பித்துப் போக உரிய நடவடிக்கைகளையோ மேற்கொள்ள இயலும் என்ற அடிப்படையில் தான் ஆளுநர் அவர்கள் தார்மீக ரீதியாக பாலாஜி அமைச்சராகத் தொடர்வது சரியல்ல என்ற அடிப்படையிலும், ஆளுநர் அவர்களுடைய நல்லெண்ணத்திற்கு பாத்திரமாக ஒரு அமைச்சர் இல்லை என்று கருதிய பட்சத்தில் அவரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க எண்ணியிருக்கலாம்.
இந்திய அரசியல் சாசனத்தின் ஒட்டுமொத்த சரத்துகளும் WE, THE PEOPLE OF INDIA இந்திய மக்களாகிய நாம், நமக்காக அளிக்கப்பட்ட என்ற உயரிய குறிக்கோளின் அடிப்படையிலேயே செயல்படுகிறது. எனவே, எல்லாவற்றிற்கும் சட்ட நுணுக்கத்திற்குள் சென்று தப்பிக்க இந்திய அரசியல் சாசனத்தில் வழியில்லை. பல்லாயிரக்கணக்கானோர் உயிர் தியாகம் செய்து பெற்ற இந்த விடுதலை - சுதந்திரம். அதைச் செந்தில் பாலாஜி போன்ற ஊழல் பெருச்சாளிகளுக்காக இரையாக்கப்படக் கூடாது.
"Appointing Authority is also Dismissing Authority"-அதாவது "அமைச்சர்களை பதவிப்பிரமாணம் செய்து வைக்கக்கூடிய ஆளுநர் அவர்களே, அவர்களை நீக்குவதற்கும் அதிகாரம் பெற்றிருக்கிறார்" என்று ஸ்டாலின் அவர்களின் தந்தையார் கருணாநிதி அவர்கள் மீது 1979 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அது குறித்த செய்தி இன்றைய The Hindu ஆங்கில நாளிதழில் பிரசுரிக்கப்படுள்ளது. எனவே, "ஆளுநருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மட்டும் தான் அதிகாரம் உண்டு. அமைச்சர்களை நீக்குவதற்கு அதிகாரம் இல்லை" என்பது வரட்டு வாதம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய மாநில அரசையே 'அந்த அரசு சரியாக செயல்படவில்லை' என்றால் அரசைக் கலைப்பதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்கு அதிகாரம் இருக்கிற பொழுது, தன்னால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்ட ஒரு அமைச்சர் அந்தப் பதவியில் நீடிப்பது அந்த மாநிலத்தின் இங்கிதத்திற்கு கேடு விளைவிக்கும் என்று கருதுகிற பொழுது அந்த குறிப்பிட்ட அமைச்சரைப் பதவி நீக்கம் செய்வதை தவிர வேறு வழியில்லை! ஆளுநர் சட்டப்படி செயல்படவில்லை என்று மயிரிழை வாதம் புரியலாம்; நீதிமன்றத்தின் விலைமதிப்பற்ற நேரத்தைக் வீணடிக்கலாம். ஆனால், மக்கள் நீதி என்று ஒன்று உண்டு. அந்த மக்கள் நீதியைத்தான் ஆளுநர் அவர்கள் பிரதிபலித்திருக்கிறார் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். கூட
"அமைச்சர் ஒருவரை நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை; சட்டப்படி சந்திப்போம்" எனக் கூறும் ஸ்டாலின் அவர்கள் ஊழல் புரிந்து, கைது செய்யப்பட்டு விசாரணையின் பிடியில் இருக்கக்கூடிய ஒரு குற்றவாளி அமைச்சரைத் தொடர்ந்து பதவியில் வைத்திருக்கவும் மக்களின் வரிப்பணத்தை அவருக்கு செலவழிக்கவும் இந்திய அரசியல் சாசனத்தின் எந்த சரத்துக்களில், எந்த பிரிவுகளில் சொல்லப்பட்டு இருக்கிறது என்பதை சொல்வாரா? தனது கட்சியின் இரண்டு மூன்று வழக்கறிஞர்கள் உரத்த குரலிலே பேசுகிறார்கள்; 'எல்லாம் வெற்றியும் நமக்கே! நமக்கே!' என்று நினைத்து முதல்வர் ஸ்டாலின் செயல்படுவது தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்களின் நலனுக்கும் உகந்ததல்ல! வழக்கறிஞர்களின் துணையோடு ஆட்சி நடத்துவதற்காக வாக்கு கேட்டு வந்தீர்கள்? ஊழலுக்கு வக்காலத்து வாங்கவா ஆட்சிக்கு வந்தீர்கள்? ஊழலற்ற நேர்மையான ஆட்சியைக் கொடுப்போம் என்பது தானே வாக்குறுதி! மக்களாட்சி என்பது மனசாட்சியோடு சம்பந்தப்பட்டது! பெரிய பெரிய நூலகங்களைத் திறந்தால் போதாது;வானுயர்ந்த பேனா சின்னங்களையும், சிலைகளையும் திறந்தால் போதாது! அரசியல் பிழைத்தோருக்கு அறம் தான் கூற்று என்பதை மறந்தால் ஆட்சி - அதிகாரத்திலிருந்தவர்களுக்கு கடந்த காலங்களில் என்ன நடந்ததோ அதுவே நடந்தேறும். நேர்மையற்ற - ஒழுக்கமற்ற ஒருவரைக் காப்பாற்றுவதற்காக பத்தாண்டு காலம் காத்திருந்து பெற்ற ஆட்சியைக் கூட இழந்து விடாதீர்கள். மக்கள் மத்தியிலிருந்து வெகு தூரம் விலகிச் சென்று விடுவீர்கள்.! சக அமைச்சர்களின் தவறுகளை மறைக்கத் துணை போகாதீர்கள். செந்தில் பாலாஜியின் ஊழலை மறைக்க மறைக்க அது விஸ்வரூபம் எடுக்கும். ஒட்டுமொத்த ஆட்சியையும் அம்பலப்படுத்தும்.
ஆளுநர் அவர்கள் நேற்று மாலையில் பிறப்பித்து, இரவு திரும்பப் பெற்ற உத்தரவை, மீண்டும் பிறப்பிப்பதற்கு முன்போ அல்லது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்போ முதல்வர் அவர்களே செந்தில் பாலாஜியை நீக்க உத்தரவிடுவதே சாதுரியமான செயலாகும்.
"அமைச்சர்களை பதவியில் அமர்த்த அதிகாரம் உள்ள ஆளுநருக்கு 'நீக்கவும்' அதிகாரம் உண்டு” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்