East Erode Bypoll Result: ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?
Mar 02, 2023, 06:56 AM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று நடைபெறுகிறது. முதலில் தபால் வாக்குகள் பிரித்து எண்ணப்பட்டு பின்னர் அரை மணி நேரம் கழித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் பிரித்து எண்ணப்படும்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா அண்மையில் காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம்.
அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உள்ளிட்ட மொத்தம் 77 பேர் போட்டியிட்டனர்.
அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டதால் 5 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 74.79 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றிருந்தது. கடந்த 2021 தேர்தலில் 66.23 சதவீதம் வாக்கு பதிவாகி இருந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் கூடுதலாக 8.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியது.
வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்குள்ள அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை சுற்று ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் என 400க்கும் மேற்பட்டோர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் பிரித்து எண்ணப்படும். பின்னர் அரை மணி நேரம் கழித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மொத்தம் 16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும். தரைதளத்தில் 10 மேசைகளும், முதல் தளத்தில் 6 மேசைகளும் என 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஒவ்வொரு மேசைகளிலும் 2 அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர் வாக்கு எண்ணிக்கை பணியை மேற்கொள்வர். ஒவ்வொரு மேசையிலும், வேட்பாளர்களின் முகவர்கள் இருப்பர். ஒவ்வொரு சுற்று முடிவிலும் பதிவான வாக்கு விவரங்கள் அறிவிக்கப்படும். இன்று மதியத்துக்குப் முன்னணி நிலவரம் தெரியவரும். மாலை, முழுமையான முடிவுகள் தெரியவரும்.
இந்த இடைத்தேர்தல் திமுகவுக்கு கெளரவப் பிரச்னையாகவும், அதிமுகவுக்கு வலிமையை நிரூபிக்கும் களமாகவும் கருதப்பட்டதால் தேர்தல் களம் விறுவிறுப்பாக காணப்பட்டது. இதனால் இந்த இடைத்தேர்தலில் வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
டாபிக்ஸ்