உதயநிதி பதவி விலகுவாரா? ரவுண்டு கட்டும் பாஜகவினர்! திணறும் திமுக!
Oct 25, 2024, 03:31 PM IST
தமிழ்நாடு அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி பதவி விலகுவாரா என பாஜகவினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழ்நாடு அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி பதவி விலகுவாரா என பாஜகவினர் கேள்வி எழுப்பி உள்ளனர். இது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களும் உதயாநிதியை கலாய்த்து வருகின்றனர். இது குறித்து ஒன்றிய அமைச்சர் எல். முருகன் மற்றும் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயாணன் திருப்பதி ஆகியோர் உதயநிதி பதவி விலகுவாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து ஒன்றிய அமைச்சர் அவரது X தள பதிவில்,
"துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து. என்ன பதில் சொல்லப்போகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
பதவி விலகுவாரா உதயநிதி ஸ்டாலின்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது.
இதையடுத்து முதலில் இருந்து மீண்டும் பாடியுள்ளனர். ஆனால் இரண்டாம் முறை பாடப்பட்டபோதும் தவறாகவே பாடியுள்ளனர். மொத்தத்தில் நிகழ்ச்சியில் சரியான முறையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை.
டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, அதற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொலைக்காட்சி சார்பில் மன்னிப்பு கேட்டது. ஆனாலும் கூட, அதை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர் எவ்வாறு கீழ்த்தரமான அரசியலை செய்தனர் என்பதை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் கலந்து கொண்டதற்காக அவர் மீது இனவாத கருத்துக்களை அள்ளித் தெளித்து பதவி விலகுமாறு வற்புறுத்தியவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். மத்திய அரசு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
தற்போது தனது புதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளதே அதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்?
தான் கலந்து கொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா? அல்லது தனது புதல்வர் உதயநிதி ஸ்டாலினை மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்து விடுவாரா?
தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விஷயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மீதே பழி சொல்லும் தந்தையும் மகனும், தாங்கள் வழிநடத்தும் தமிழக அரசின் நிகழ்ச்சியில், அவர்கள் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டால் பொறுப்பேற்க மாட்டார்களா? இதை வைத்து அவர்கள் மீது இனவாத கருத்துக்களை அள்ளி தெளித்தால் அது சரியானதாக இருக்க முடியுமா?
நிகழ்ச்சிக்கு பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பியதற்கு, ‘‘இந்த விவகாரத்தை பெரிய பிரச்சனையாக்கி விடாதீர்கள்’’ என மழுப்புகிறார் உதயநிதி ஸ்டாலின். ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியை பெரும் பிரச்சனையாக்கி எவ்வாறு அரசியல் செய்தோம் என்பதை தந்தையும் மகனும் இப்போதாவது உணர்ந்து பார்க்க வேண்டும்.
ஆளுநர் நிகழ்ச்சியை வைத்து தொடர்ந்து விவாதங்கள் நடத்திய ஊடகங்கள் இதுபற்றி பேசுமா? ஆளுநருக்கு ஒரு அளவுகோல்- உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு அளவுகோலா?
சாதாரணமாக நடந்த தவறை சுட்டிக்காட்டி திருத்தச் சொல்வது தான் நல்ல தலைவர்களுக்கு அழகு. இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி இனவாத அரசியல் செய்வது தான் போலி திராவிட மாடல். இதனை அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் ஊடகங்களும் உணர வேண்டும்" எனக் குறிப்பித்துள்ளார்.
நாராயணன் திருப்பதி பதிவு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் தமிழ் தாய் வாழ்த்து முறையின்றி பாடப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 'திராவிடம், திராவிடம்' என்று சொல்லி திட்டமிட்ட ரீதியில் தமிழை அழிக்க துடிக்கும் திமுகவின் கனவு பலிக்காது. 'என் இனிய தமிழ் மொழியை' அதிகாரத்தை கொண்டு அழித்து விடலாம் என நினைத்தால் அதை எதிர் கொண்டு தமிழ் மொழியை காப்போம். ஆங்கில மோகத்தில் திளைத்திருக்கும் இவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்தில் தமிழின் புகழை மறைக்க 'புகழ்' என்ற சொல்லை நீக்கி 'திகழ்' என்று பாட வைத்திருப்பதும், திராவிட நல் திருநாடும் என்பதில் 'திருநாடும்' என்ற சொல்லையும் நீக்க வைத்து தமிழ் தாய் வாழ்த்தை சிறுமைப்படுத்தி விட்டனர்.
இதன் மூலம் தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்து, அவதூறு செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.பாஜக வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தமிழ்த்தாய் வாழ்த்தை திமுகவால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் ஆங்கிலத்தை திணிக்க பல்வேறு வகைகளில் முயற்சி செய்கின்றனர் இவர்கள். நேரடியாக ஆங்கிலத்தை திணிக்க முடியாததால் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை நீக்குகின்றனர்.( கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படி தான் உதயநிதி பொங்கியெழுந்து கூறினார்)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆளுநர் கலந்து கொண்ட விழாவில் தமிழ் தாய் வாழ்த்தில் ஒரு வரியை பாட மறந்த போது, அது ஆளுநரால் திட்டமிட்டு நடைபெற்றது என்று குற்றம் சாட்டியதோடு, அவரை நீக்க வேண்டும் என்றும் விலக வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கோரியிருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்ட விழாவில் இந்த அதிர்ச்சி தரும் வகையில் தமிழ் தாய் வாழ்த்தை சிறுமைப் படுத்தும் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. ஆளுநரை நீக்க வேண்டும் என்று சொன்னவர்கள், உதயநிதி ஸ்டாலின் தமிழுக்கு அவமரியாதை செய்து விட்டார் என்று விமர்சனம் செய்து அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க குரல் கொடுப்பார்களா? அல்லது தமிழை அவதூறு செய்ததற்கு பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
டாபிக்ஸ்