Tasmac Shops : டாஸ்மாக் கடைகளுக்கு நாளை லீவு: எங்கு தெரியுமா?
Feb 04, 2023, 12:07 AM IST
Tasmac Shops Closed: வள்ளலார் நினைவு தினத்தையொட்டி நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மதுபான கடைகள் திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, குடியரசு தினம், வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. அந்த வகையில், வடலூர் ராமலிங்கர் நினைவு தினம் நாளை (பிப்.05) கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மது விற்பனை செய்ய தடை செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனை மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வள்ளலார் நினைவு தினத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் 5 ஆம் தேதி மதுக்கடைகள் அடைக்கப்படுகிறது. மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மதுரை மாவட்டத்தில் 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 'வள்ளலார் நினைவு தினம்' கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மனமகிழ் மன்றத்துடன் கூடிய மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள், தமிழ்நாடு சுற்றுலாத்துறை விடுதிகளால் நடத்தப்படும் மதுபான கூடங்கள் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் 5-ந்தேதி அன்று மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5 ஆம் தேதி மதுபான சில்லரை விற்பனையும் நடைபெறாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி.5) அன்று இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்று ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் வரும் 05.02.2023-ம் தேதி ஞாயிற்றுகிழமை அன்று ஆடுவதை செய்யும் கூடத்தில் ஆடுவதை செய்ய அனுமதியில்லை எனவும், அனைத்து ஆடு மற்றும் மாடு இறைச்சி விற்பனை செய்யும் கடைகளுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்றைய தேதியில் மாநகராட்சி ஆடுவதை கூடம் செயல்படாது. எனவே, அன்றைய தினத்தில் ஆடு, கோழி, மாடு ஆகிய உயிரினங்கள் வதை செய்யப்படக்கூடாது எனவும், மீறி இறைச்சி கடைகள் செயல்பட்டால் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நீதி மன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வித மதுபான கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று சிவகங்கை மாவட்டத்திலும் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.