Thoothukudi Firing Case: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.. 21 பேர் மீது நடவடிக்கை தொடக்கம்!
Nov 17, 2023, 05:05 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 21 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரையின்படி 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 ஆம் நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு, தடியடி சம்பவங்களில் 15 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட 17 காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 21 பேர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த நிலையில், எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பி இருந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (நவ.17) விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய மாவட்ட ஆட்சியர், 17 காவல்துறை அதிகாரிகள், 3 வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு விளக்க அறிக்கையை தாக்கல் செய்தது. அப்போது நீதிபதிகள், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்னென்ன?, துப்பாக்கிச் சூட்டில் இவர்களின் பங்கு என்ன என்பது குறித்து தனித்தனியாக விளக்க அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 11-க்கு தள்ளிவைத்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்