HBD Kavimani Desigavinayagam Pillai: ஆசிரியர் டூ ஆராய்ச்சியாளர்..யார் இந்த கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை?
Jul 27, 2024, 06:10 AM IST
Kavimani Desigavinayagam Pillai: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆராய்ச்சித் துறையிலும் பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார்.
மறைந்த தமிழக மறுமலர்ச்சிக் கவிஞர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பிறந்தநாள் இன்று (ஜூலை 27). இந்நாளில் அவரை பற்றிய அறிய தகவல்களை இந்த சிறப்பு கட்டுரை மூலம் தெரிந்துகொள்வோம்.
பிறப்பு
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தை அடுத்த தேரூர் கிராமத்தில் 1876 ஆம் ஆண்டு சிவதாணுபிள்ளை - ஆதிலெட்சுமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். ஆரம்பப் பள்ளிக் கல்விக்குப் பின் எம்.ஏ. பட்டம் பெற்ற இவர், பின்னர் ஆசிரியர் பயிற்சி முடித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியராக பணியாற்றினார். நாகர்கோவிலில் உள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
திருமண வாழ்க்கை
உமையம்மை எனும் பெண்ணை 1901 ல் மணம் முடித்தார். கவிமணி தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போலவே வளர்த்தார்.
இலக்கியப் படைப்புகள்
பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், குழந்தைப் பாடல்கள், இயற்கை பாட்டுக்கள், சமூகப் பாடல்கள், தேசியப் பாடல்கள், வாழ்த்துப் பாடல்கள், வரலாற்று சிறப்புடையை கவிதைகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள் மட்டுமின்றி பழந்தமிழ்ப்பண்பும், தமிழ்மணமும், புதுமைக் கருத்துகளும் நிறைந்த பல பாடல்களையும் கவிமணி எழுதியுள்ளார். கவிமணியின் பாடல்களில் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இறை வழிபாடு, சாதி பேதம் கடிதல், குழந்தைகளிடம் கொண்ட பற்று போன்றவற்றை கொண்டிருக்கும்.
கவிமணி பட்டம்
எட்வின் ஆர்னால்டின் ஆசிய ஜோதி, பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார். 1940ம்ஆண்டு டிசம்பர் 24ந்தேதி அன்று சென்னை பச்சைப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை தேசிய விநாயகம் பிள்ளைக்கு ‘கவிமணி’ என்ற பட்டம் வழங்கினார். அன்றுமுதல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.
புகழ்பெற்ற படைப்புகள்
‘மலரும் மாலையும்’, ‘ஆசிய ஜோதி’, ‘உமர்கய்யாம் பாடல்கள்’, ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’, ‘அழகம்மை ஆசிரிய விருத்தம்’, ‘கதர் பிறந்த கதை’, ‘குழந்தைச் செல்வம்’ உள்ளிட்ட இவரது படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவரது ‘தேவியின் கீர்த்தனங்கள்’ என்ற இசைப்பாடல் தொகுப்பில் இடம் பெற்ற பல பாடல்களை, இசைக் கலைஞர்கள் மேடைகளில் விரும்பிப் பாடினார்கள்.
தபால் தலை வெளியீடு
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க் கவிஞர்களுள் ஒருவருமான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1954-ம் ஆண்டு, தமது 78-வது வயதில் மறைந்தார். இவர் பிறந்த ஊரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு இவர் நினைவாக 2005-ல் தபால் தலை வெளியிட்டது.
ஆராய்ச்சியாளர்
ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.
148வது பிறந்தநாள்
78 ஆண்டுகள் வாழ்ந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, இலக்கியத் துறைக்கு கவித்துவ வரிகளினால் ஆற்றிய சேவை அளப்பரியது. மறைந்த தமிழக மறுமலர்ச்சிக் கவிஞர் கவிமணியின் 148வது பிறந்தநாள் இன்று (ஜூலை 27). இந்த சிறப்பு நாளில் அவரை நினைவில் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9