Tamil Top News : ‘ஆம்ஸ்ட்ராங் கொலை அப்டேட்.. கிருஷ்ணகிரி வன்கொடுமை உத்தரவு.. மழை எச்சரிக்கை’ பிற்பகல் ப்ரேக்கிங்!
Aug 21, 2024, 03:36 PM IST
Tamil Top News : பிற்பகலில் நடந்த மிக முக்கியமான செய்திகளின் கதம்பத் தொகுப்புகள் இதோ..!
இன்று பிற்பகலுக்குப் பின் தமிழ்நாடு முழுக்க நடந்த பல்வேறு நிகழ்வுகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் பற்றிய செய்தி தொகுப்பை இங்கு காணலாம்:
சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு
ஆகஸ்ட் 23 சுபமுகூர்த்தம், ஆகஸ்ட் 24 மற்றும் ஆகஸ்ட் 25 சனி, ஞாயிறு விடுமுறை, ஆகஸ்ட் 26ல் கிருஷ்ணஜெயந்தி என தொடர் விடுமுறை வரும் காரணத்தால், அதிகம் பேர் வெளியூர் பயணிக்க வாய்ப்புள்ளது. அதனால், இதற்காக 23 ம் தேதியிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை; ரெட் கார்னர் நோட்டீஸ்
சமாஜ்வாதி கட்சியின் தமிழக தலைவராக இருந்து கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலுக்கு ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டுள்ள நிலையில், சர்வதேச போலீசாரின் உதவியுடன் அவரை கைது செய்ய, ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி வன்கொடுமை; திடீர் உத்தரவு
கிருஷ்ணகிரியில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, 15 நாட்களில் விசாரணையை முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாணவி வன்கொடுமை விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், தமிழக முதல்வர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
மெட்ரோ பலி; 5 பேர் கைது
சென்னை பூந்தமல்லி அருகே மெட்ரோ பணியின் போது, 40 அடி உயரத்தில் தவறி விழுந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் தேவேந்திர சிங், உயிரிழந்தார். இது தொடர்பான விசாரணைக்குப் பின் மெட்ரோ நிர்வாக ஒப்பந்தகாரர் மற்றும் துணை ஒப்பந்தகாரர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ள நசரத்பேட்டை போலீசார், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குத்து பாலத்தில் சரக்கு ரயில்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் செங்குத்து ரயில்பாலத்தில் இன்று சரக்கு ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக 11 சரக்கு ரயில்பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த நிகழ்வை ஏராளமானோர் பாலத்தில் நின்றபடி ரசித்தனர்.
அகற்றிய ஆக்கிரமிப்புகள் என்ன?
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆக்கிரமிப்பு நீர் நிலைகள் மற்றும் ஆக்கிரமிப்பு நிலங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் அறிவிப்பு
சென்னை பல்கலை கழகத்தின் தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை 6 மணிக்கு வெளியாகும் என்றும் பல்கலை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதி மாணவர்கள், முடிவுகளை ideunom.ac.in என்கிற முகவரியை க்ளிக் செய்து அறிந்து கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 861 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவதற்கான அறிக்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். செப்டம்பர் 11 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வித் தகுதி உள்ளிட்ட விபரங்களை https://www.tnpsc.gov.in/ என்கிற இணையதளத்தில் காணலாம்.
12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் முக்கிய செய்திகள் மற்றும் ப்ரேக்கிங் செய்திகள் பற்றி அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள்!
டாபிக்ஸ்