இரும்பு கடைகளில் இலவச சைக்கிள்கள்! வெளியான அதிர்ச்சி செய்தி! அரசு சொல்லும் பதில் இதுதான்!
Jun 30, 2024, 09:33 PM IST
இந்த அரசு பொறுப்பேற்று, கடந்த 3 ஆண்டுகளாக 16,73,374 தரமான மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மிதிவண்டிகள் ஒப்பந்தப்புள்ளி சட்ட விதிமுறைகளின்படி கொள்முதல் செய்யப்படுகின்றன. மிதிவண்டிகள் தரம் இரண்டு நிலைகளில் உறுதி செய்யப்படுகின்றது என தமிழ்நாடு அரசு விளக்கம்
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் மிதிவண்டிகள் தரமற்று உள்ளதாக எழுந்த புகாருக்கு அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச சைக்கிள்கள் தரமற்று உள்ளதாக சில நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், இது குறித்து ட்வீட் செய்து இருந்தார். அதில், “தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்
இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சைக்கிள்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் எவை? 3-4 நிறுவனங்களுக்கு மேல் இருக்க முடியாதே?
இந்தத் தரமில்லாத சைக்கிள்களத் திரும்பப் பெற்று அவற்றுக்கு மாற்றாக தரமான சைக்கிள்களை அந்த நிறுவனங்கள் தர வேண்டும் என்று சட்டப்படியான நடவடிக்கைகளத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என தெரிவித்து இருந்தார்.
5 லட்சம் இலவச கைக்கிள்கள்
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (29.6.2024) தரம் குறைந்துள்ளதால், இலவசமாக வழங்கப்பட்ட மிதிவண்டிகளை விற்பனை செய்கிறார்கள் என்று தவறான செய்தி வெளிவந்துள்ளது. மாணவ, மாணவியர்களின் நலன் கருதி ஆண்டுதோறும் இலவச மிதிவண்டிகள் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஆண்டுதோறும் தோராயமாக 5 இலட்சம் மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றது.
இரண்டு நிலைகளில் தரம் உறுதி
இந்த அரசு பொறுப்பேற்று, கடந்த 3 ஆண்டுகளாக 16,73,374 தரமான மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மிதிவண்டிகள் ஒப்பந்தப்புள்ளி சட்ட விதிமுறைகளின்படி கொள்முதல் செய்யப்படுகின்றன. மிதிவண்டிகள் தரம் இரண்டு நிலைகளில் உறுதி செய்யப்படுகின்றது.
மிதிவண்டிகளை கிண்டியில் உள்ள CTAL(Chemical Testing Analytical Lab) நிறுவனத்தில் முழுமையாக Destructive Test செய்யப்பட்டு தர அறிக்கை (Quality Test Report) பெறப்படுகிறது. அதன் பின்னரே நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுவதற்கு முன்பாக, மிதிவண்டிகள் Specificationபடி தரமாக உள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது. இச்செய்தி குறித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து கள ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளார்.
மிதிவண்டி சார்ந்து புகார்களை பெறவில்லை
அவ்வறிக்கையின்படி செல்வபுரம், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மிதிவண்டிகள் பயனுள்ளதாக இருப்பதாகவும், நல்ல நிலையில் அதனை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். மிதிவண்டி தரம் சார்ந்து எவ்வித புகாரும் பெறப்படவில்லை எனவும் மிதிவண்டிகளை தனியார்களுக்கு விற்பனை செய்ததாக மாணவர்களால் தெரிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மிதிவண்டி திட்டம் சிறப்பாக செயல்படுகின்றது
நாளிதழில் வெளிவந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள கடை ஆய்வு செய்யப்பட்டதில், அங்கிருந்த சில மிதிவண்டிகள் சிறு பழுதுகளை சரி செய்வதற்காக மாணவர்களால் கடையில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பழுதுநீக்கம் செய்யப்பட்டவுடன் மாணவர்கள் பெற்றுச் செல்வர் என்றும், அவை விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டவை அல்ல என்று தெரியவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
மாணவ மாணவியருக்கு தரமான மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றது. எனவே பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தியாகும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
டாபிக்ஸ்