தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rip Marimuthu: ’மூடநம்பிகைக்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்’ மாரிமுத்துவுக்கு முதல்வர் புழகாரம்!

RIP Marimuthu: ’மூடநம்பிகைக்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்’ மாரிமுத்துவுக்கு முதல்வர் புழகாரம்!

Kathiravan V HT Tamil

Sep 08, 2023, 05:32 PM IST

google News
”அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும்”
”அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும்”

”அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும்”

பிரபல இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து, இன்று காலை திடீர் மாரடைப்பால் காலமானார். 57 வயதான இவர், கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர். சமீபத்தில் ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தவர்.

சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, பலரின் ஆதரவை பெற்றவர். காலம் கடந்து, சீரியல் மூலம் தனக்கு கிடைத்த இந்த புகழால் சமீபத்தில் அதிகம் கொண்டாடப்பட்டவர் மாரிமுத்து. அவருடைய இழப்பு, அவருடைய குடும்பத்தாருக்கு மட்டுமின்றி, திரையுலக ரசிகர்களுக்கும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு திரையுல பிரபலங்களும், முற்போக்கு சிந்தனையாளர்களும் அஞ்சலி செய்தி வருகின்றனர். 

இந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரும், பிரபல நடிகருமான திரு. மாரிமுத்து அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். 

தேனி மாவட்டத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து, பல்லாண்டுகள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, இயக்குநர் ஆனவர் திரு. மாரிமுத்து அவர்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மேலும், சின்னத்திரையிலும் தனது நடிப்புத் திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராகப் புகழ்பெற்றார்.

மேலும், பல நேர்காணல்களிலும் நிகழ்ச்சிகளிலும் இவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி