TN Cabinet Reshuffle: TRB ராஜா எனும் நான்…! நாளை மறுநாள் அமைச்சரவை மாற்றம்! ராஜ்பவனுக்கு சென்றது ஓலை?
May 09, 2023, 08:04 PM IST
அமைச்சரவை மாற்றம் குறித்து, கிண்டி கவர்னர் மாளிகையில் , தமிழக அரசின் பொதுத்துறைச் செயலர் ஜெகநாதன் ஐ.ஏ.எஸ். நேரில் சென்று கடிதம் கொடுத்துள்ளதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாளை மறுநாள் புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா கிண்டி ராஜ்பவனில் காலை 11 மணிக்கு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமைச்சரவை மாற்றம் குறித்து, கிண்டி கவர்னர் மாளிகையில் , தமிழக அரசின் பொதுத்துறைச் செயலர் ஜெகநாதன் ஐ.ஏ.எஸ். நேரில் சென்று கடிதம் கொடுத்துள்ளதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3 மந்திரிகளுக்கு கல்தா?
திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், ஏற்கெனவே இரண்டு முறை அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களில் அமைச்சர்களின் துறைகள் மாற்றி வழங்கப்பட்டுள்ளதே தவிர இதுவரை ஒரு அமைச்சர் கூட அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படவில்லை. ஆனால் தற்போது நடைபெற உள்ளதாக கூறப்படும் அமைச்சரவை மாற்றத்தில் 2 முதல் 4 அமைச்சர்கள் வரை அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
கயல்விழி செல்வராஜுக்கு ஆறுதல்
குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தின் தலைவராக கயல்விழி செல்வராஜ் நியமிக்கப்பட்டார்.
அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதால் அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைச்சர் பதவிக்கு நிகரானதாக கருதப்படும் வாரியத் தலைவர் பதவியை கட்சித் தலைமை அவருக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.
பிடிஆரிடம் இருந்து நிதித்துறை பறிப்பு?
இந்த நிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுடன், சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்படலாம் என கோட்டை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதன்படி பிடிஆரிடம் உள்ள நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை தங்கம் தென்னரசுவுக்கும், தங்கம் தென்னரசுவிடம் உள்ள தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிக்குப்பு துறை டி.ஆர்.பி.ராஜாவுக்கும் வழங்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
மனோ தங்கராஜுக்கு பால்வளம்?
மனோ தங்கராஜிடம் உள்ள தகவல் தொழில்நுட்பத்துறை பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கப்படலாம் என்றும் பால் வளத்துறை மனோ தங்கராஜுக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையை மானமதுரை எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான தமிழரசி அல்லது சங்கரன் கோயில் எம்.எல்.ஏ ராஜா ஆகிய இருவரில் ஒருவருக்கு வழங்க கட்சித் தலைமை யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக அமைச்சரவை மாற்றம் குறித்து கிண்டி ராஜ்பவனில் ஆளுநரை அமைச்சர் துரைமுருகன் சந்திக்க உள்ளதாக வெளியான செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ”அமைச்சரவை மாற்றம் குறித்து செய்தியாளர்களுக்கு என்ன தெரியுமோ அதுதான் தனக்கும் எனக்கும் தெரியும்” என்று அமைச்சர் துரைமுருகன் கூறி இருந்தார்.