Tamil Nadu Assembly: நெல்லையப்பர் கோயில் தேர் வடம் அறுந்தது ஏன்? அபசகுணமா? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
Jun 22, 2024, 01:23 PM IST
Tamil Nadu Assembly: நேற்றைய தினம், நெல்லையில் நடந்த நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவில் வடம் அறுந்த நிகழ்வு குறித்த வீடியோக்கள் அபசகுணம் என கூறி சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது.
நெல்லையப்பர் கோயிலின் திருத்தேர் வடம் அறுந்தது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சட்டப்பேரவையின் 2ஆம் நாள் கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2ஆம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இன்றைய தினம், நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல்கள் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை, மீன்வளம், பால் வளத்துறைகளின் மீதான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு பதில் அளித்து, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
நெல்லையப்பர் கோயில் தேர் வடம் குறித்து கேள்வி
கேள்வி நேரத்தின்போது, கீழ்பெண்ணத்தூர் எம்.எல்.ஏ கு.பிச்சாண்டி, நெல்லையப்பர் கோயிலில் தேர் இழுக்கும்போது கயிறு சரி இல்லை என்று செய்திகள் வந்து உள்ளது, திருவண்ணாமலை கோயிலில் உள்ளது போல் இரும்பு சங்கிலிகள் மூலம் தேர் இழுக்க அரசு நடவடிக்கை எடுக்கமா என அறிய விரும்புகிறேன் என கூறினார்.
அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
இதற்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆசியாவில் உள்ள மிகப்பெரிய தேர்களில் மூன்றாவது பெரிய தேராக நெல்லையப்பர் கோயில் தேர் உள்ளது. 28 அடி நீளமும், 28 அடி அகலமும், 80 அடி உயரமும், 450 டன் எடையும் கொண்டதாக அந்த தேர் உள்ளது.
9ஆம் நாள் திருவிழாவான தேர் திருவிழாவின்போது, வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தேர் வடத்தை பின்னால் இருந்து நெம்புகோல் தராததன் விளைவாக தேரை பக்தர்கள் பக்தி பரவசத்தோடு இழுத்ததால், தேர் வடம் அறுந்தது. அதற்கு மாற்றாக திருச்செந்தூர் தேர் வடத்தை இணைத்து வெற்றிகரமாக நேற்றிரவு 9.30 மணி அளவில் சுவாமிகள் நிலையை அடைந்தனர்.
தேரின் இணைப்பு பகுதியில் இரும்பு சங்கிலி இருக்கும். 450 டன் எடை கொண்ட இந்த நெல்லையப்பர் கோயில் தேரை இழுக்க கயிற்றால் ஆன வடம் பயன்படுத்தப்படுகின்றது. நேற்றைய உச்சவத்தில் தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறையினர் வடம் மற்றும் தேருக்கும் சான்று அளித்ததால்தான் தேர் வீதி உலா வந்தது. எந்த தேர்களுக்கு சங்கலிகள் தேவையோ அதை செய்து தருவோம் என கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9