’ஒன்றிய பிரதமர்! ம.பிக்கு 25 கோடி! தமிழ்நாட்டுக்கு வெறும் 10 கோடி!’ சட்டமன்றத்தில் பாஜகவை விளாசிய உதயநிதி
Jun 27, 2024, 02:55 PM IST
Tamil Nadu Assembly: இந்த நேரத்தில் இன்னும் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை நடத்த ஒன்றிய அரசு சென்ற வருடம் மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு கொடுத்த நிதி 25 கோடி, தமிழ்நாட்டுக்கு கொடுத்த நிதி வெறும் 10 கோடி என சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
கேலோ இந்தியா விளையாடு போட்டிகளில் தமிழ்நாட்டுக்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜூன் 29ஆம் தேதி இக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மானியக் கோரிக்கை விவாதம்
இன்றைய தினம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை, கூட்டுறவு துறை, உனவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் நடைபெறுகின்றது. இந்த விவாதங்களில் பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்.காந்தி, பெரியகருப்பன் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் பதிலுரை
விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன், சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை மானிய கோரிக்கை விவாதங்கள் மீதான பதிலுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பதில் அளித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் முதல் முறையாக கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை நகரங்களில் 12 நாட்கள் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் இந்தியா முழுவதும் 5630 வீரர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய பிரதமரும், நமது மாண்புமிகு முதலமைச்சரும் விளையாட்டு துவக்க போட்டியில் கலந்து கொண்டு பாராட்டினார்கள். ஒன்றிய பிரதமர் குறிப்பாக, ‘இவ்வளவு சிறப்பான கேலோ இந்தியா நிகழ்ச்சியை நான் எங்கும் பார்த்தது இல்லை’ என்று கூறினார்.
இந்த நேரத்தில் இன்னும் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை நடத்த ஒன்றிய அரசு சென்ற வருடம் மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு கொடுத்த நிதி 25 கோடி, தமிழ்நாட்டுக்கு கொடுத்த நிதி வெறும் 10 கோடி.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில், தமிழ்நாட்டு மாணவர்கள் 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என 98 பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்த பதக்க பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்தனர். கேலோ இந்தியா பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு முதல்முறையாக முதல் மூன்று இடங்களுக்குள் வந்து உள்ளது.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை பொறுத்தவரை 15 பிரிவுகளில் நடந்த போட்டிகளில் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டும் அதிக வீரர்கள் கலந்து கொள்ள நடவடிக்கை எடுப்போம். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கூடுதல் விளையாட்டு போட்டிகள் சேர்க்க வேண்டும் என்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு, இந்த ஆண்டு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்படும் என கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9