Airport: ஆட்களே வரல! சேலம் ஏர்போர்ட்டை ஈரோட்டுக்கு நகர்த்துங்க! EVKS பேச்சால் பாமக MLA அதிர்ச்சி! பேரவையில் சிரிப்பலை!
Jun 27, 2024, 02:47 PM IST
Tamil Nadu Assembly Live:சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏவான இரா.அருள், ‘சேலம் விமானநிலையத்தை விரிவாக்கம் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறி இருந்தார்.
சேலம் விமான நிலையத்தை சங்ககிரிக்கு நகர்த்த வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது சட்டமன்றத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜூன் 29ஆம் தேதி இக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மானியக் கோரிக்கை விவாதம்
இன்றைய தினம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை, கூட்டுறவுத்துறை, உனவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைகள் மீதான மானியக்கோரிக்கைகள் நடைபெறுகின்றது. இந்த விவாதங்களில் பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்.காந்தி, பெரியகருப்பன் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
ஒசூரில் விமான நிலையம்
விதி எண் 110-இன் கீழ் ஓசூரில் 2ஆயிரம் ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையமும், திருச்சியில் நூலகம் மற்றும் அறிவு சார் மையமும் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து பேசிய சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏவான இரா.அருள், ‘சேலம் விமானநிலையத்தை விரிவாக்கம் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். ’
விமான நிலையத்தை மாற்ற சொல்லும் ஈவிகேஎஸ் இளங்கோவன்
பின்னர் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இந்திரா காந்தி சிலையை சென்னையில் அமைக்க போகிறோம் என்று அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி. இந்த அறிவிப்பு மூலம் தனது உள்ளம் பெரியது. யாருக்கும் நான் பகைவன் அல்ல, எல்லோருக்கும் நல்லது செய்யும் எண்ணத்தில் உள்ளேன் என்பதை முதலமைச்சர் சொல்லாமல் சொல்லி உள்ளார். அதனால் அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஓசூர் விமான நிலையத்தை பற்றி பேசும்போது, மரியாதைக்குரிய அருள் பேசும்போது, சேலம் விமான நிலையத்தை விரிவு செய்ய வேண்டும் என்று சொன்னார். அது ஏற்றுக் கொள்ள கூடியதுதான். ஆனால் சேலம் விமான நிலையம் ஆறுமாதம் ஓடும், மீண்டும் மூடிவிடுவார்கள். காரணம் மக்கள் அதிகம் வருவதில்லை. என்னை பொறுத்தவரை பயனூள்ள விமான நிலையமாக இருக்க வேண்டும் என்றால், அதை கொஞ்சம் நகர்த்தி ஈரோட்டுக்கும் சேலத்திற்கும் நடுவில் வைக்க வேண்டும் என்றார். இதனால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
தொடந்து பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், இப்போது உள்ள விமான நிலையம் ஓமலூரில்தான் உள்ளது. சேலத்தில் இருந்து ஓமலூர் செல்லவே ஒரு மணி நேரம் ஆகும், ஆனால் விமான நிலையத்தை நகர்த்தி சங்ககிரியில் வைத்தால், நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் உள்ள பாதி பகுதி பயன் அடையும். குறிப்பாக ஈரோடு மக்களுக்கு சௌகரியமாக இருக்கும். ஒரு பரந்த எண்ணத்தோடு ஒத்துக் கொள்ள வேண்டும்.
கலைஞர் அறிவுசார் நூலகத்தை திருச்சியில் கொண்டு வருவதை வரவேற்கின்றேன். கோயில்களை கட்டுவதை நூலகங்கள் கட்டுவது முக்கியம் என்று ஈரோட்டில் இருந்துதான் குரல்கள் வந்தது. ஆகவே ஈரோட்டுக்கு ஒரு நூலகத்தை தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்