PTR: ’அரசு கேபிள் டிவிகளில் விரைவில் வருகின்றது HD செட் ஆப் பாக்ஸ்!’ அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல்!
Jun 22, 2024, 03:40 PM IST
Tamil Nadu Assembly: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிர்வாகத்திற்கு ஹெச்.டி.பாக்ஸ் இன்னும் தரவில்லை, இதனால் கேபிள் டிவி இணைப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது என சட்டமன்ற உறுப்பினர் பாபு கேள்வி எழுப்பி இருந்தார்.
அரசு கேபிள் டிவி இணைப்புகளில் விரைவில் ஹெச்.டி.தர செட் ஆப் பாக்ஸ்கள் வழங்கப்படும் என தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, ’கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க அரசு முன் வருமா?’ என விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாபு கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், கலைஞர் ஆட்சியில் 2007ஆம் ஆண்டிலேயே கேபிள் டிவி நலவாரிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை அறிவித்தார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் கூட, வாரியமும், அதன் செயல்பாடுகளும் முடக்கப்பட்டு இருந்தது. எனினும் முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன ஆபரேட்டர்கள் மட்டுமின்றி, அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் கேபிள் டிவி நலவாரியத்தை ஆபரேட்டர்களையும் உள்ளடக்கியதாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. வாரியத்திற்கு புதிய உறுப்பினர்களை சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதால், இவர்கள் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை பெற வகை செய்யப்பட்டு உள்ளது என்றார்.
பின்னர், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிர்வாகத்திற்கு ஹெச்.டி.பாக்ஸ் இன்னும் தரவில்லை, இதனால் கேபிள் டிவி இணைப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது என சட்டமன்ற உறுப்பினர் பாபு கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சில நாட்களுக்கு முன் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கூட தவறான தகவல்கள் உடன் அறிக்கை வெளியிட்டு இருந்தார். ஒரு காலத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் 70 லட்சம் கேபிள் டிவி இணைப்புகள் இருந்தன. நாடு முழுவதும் டிஜிட்டல் சிக்னல்களை வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளது. அன்றைய அதிமுக அரசு வெறும் 36 லட்சம் செட்பாப் பாக்ஸ்களை மட்டுமே வாங்கி 70 லட்சம் இணைப்புகளை சரிபாதியாக குறைத்துவிட்டனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 200 கோடி திவாலில் இருந்தது. பல ஆபரேட்டர்கள், டிவி கம்பெனிகளுக்கு பணம் பாக்கி தர வேண்டி இருந்தது. இந்த நிர்வாக குளறுபடிகளை திருத்தி இன்னும் 2 மாதத்தில் ஹெச்.டி.பாக்ஸ்களை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம். முதலமைச்சர் இது குறித்து கட்டளைகளை இட்டுள்ளார். வரும் காலங்களில் குறைந்த விலையில் சிறந்த சேவையை தரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இருக்கும் என அமைச்சர் கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9