Tamil Live News Updates : சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளையும் விடுமுறை
Dec 08, 2023, 05:52 PM IST
Tamil Live News Updates: இன்றைய (08.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
அமைச்சர் பொன்முடி வழக்கு
Ponmudy Case: சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலைக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், வேலூர் நீதிமன்ற நீதிபதியின் விளக்க மனுவின் நகலை பொன்முடி தரப்பினருக்கு வழங்க பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளையும் விடுமுறை
School Holiday: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களிலும் நாளை தனியார் பள்ளிகளையும் திறக்க கூடாது எனவும் உத்தரவு.
நீலகிரி விரைவு ரயில் இன்று ரத்து!
Nilagiri Express: சென்னை வெள்ளம் காரணமாக, மேட்டுப்பாளையம் - சென்னை செல்லும் நீலகிரி விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.
பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்!
Powerstar Srinivasan: இறால் பண்ணை அதிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி நிலவேஸ்வரன் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார்.
டிச. 26ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம்!
AIADMK General Council Meeting: அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் காலை 10.35 மணிக்கு அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
வேளச்சேரி விபத்து - மேலும் ஒரு உடல் மீட்பு
Cyclone Michuang: சென்னை வேளச்சேரியில் கேஸ் பங்க் அருகே கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், மேலும் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. டிச.4ஆம் தேதி கேஸ் பங்க் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்த 8 பேரில், 6 பேரை மீட்புக் குழுவினர் மீட்டனர். பள்ளத்தில் சிக்கியவர்களில் ஒருவரின் உடல் இன்று அதிகாலை மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஒருவரின் சடலத்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், உடல் அடையாளம் காணப்பட்டதாக தகவல்.
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Weather Update: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (டிச.08) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கலைஞர் '100' விழா ஒத்திவைப்பு
சென்னை, சேப்பாக்கத்தில் திரை கலைஞர்களால் டிசம்பர் 24 ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த 'கலைஞர் 100' விழா ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மிக்ஜாம் புயல் - ரூ. 3 கோடி நிதியுதவி வழங்கியது டிவிஎஸ்
Cyclone Michuan:'மிக்ஜாம்' புயல் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி வழங்கியது டிவிஎஸ் நிறுவனம். டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து காசோலையை வழங்கினார்.
மிக்ஜாம் புயல் பாதிப்பு - ஒரு மாத ஊதியத்தை வழங்க செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.
கொடநாடு கொலை வழக்கு!
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம். வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக இ.பி.எஸ்.க்கு விலக்கு அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
திமுக இளைஞரணி மாநாடு தள்ளிவைப்பு - திமுக தலைமை!
சேலத்தில் டிச.17ம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு, டிச.24ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால், மாநாடு தேதி மாற்றம்.
தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய உடன்பாடு இல்லை -சட்ட அமைச்சகம் தகவல்!
தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திற்கு உடன்பாடு இல்லை. பாம்பே உயர் நீதிமன்றம் என்பதை, 'மும்பை உயர் நீதிமன்றம்' என பெயர் மாற்றம் செய்ய மகாராஷ்ட்ரா, கோவா அரசுகள் மற்றும் உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளன.நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சகம் தகவல்.
தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி
தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வீட்டில் தவறி விழுந்து இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
வெங்காய ஏற்றுமதிக்கு தடை
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.
மிக்ஜாம் புயல் பாதிப்பு -ஒரு மாத ஊதியத்தை வழங்கும் முதல்வர்!
மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குகின்றேன். அனைத்து சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!
பல்கலை மற்றும் அதன் கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளில் வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை
வங்கிகளுக்கான ரிசர்வ் வங்கியின் கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடர்கிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.08) சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ரூ.46,680க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.5,835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் வெள்ளியின் விலை இன்று (டிச.8) மாற்றம் இல்லாமல் ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.80000-க்கு விற்பனையாகிறது.
செங்கல்பட்டில் லேசான நில அதிர்வு
செங்கல்பட்டை மையமாகக் கொண்டு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக நில அதிர்வு பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்து - தம்பதி பலி
திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் கேரளாவைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்துள்ளனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் - சமயபுரம் சுங்கச்சாவடியை இணைக்கும் பாலத்தில் வேகமாக சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை
சென்னை உள்ளிட்ட15 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை நீலகிரி, ஈரோட்டு திருப்பூர், திண்டுக்கல் கரூர், திருச்சி அரியலூர் கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணிவரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
மிக்ஜாம் புயல் பாதிப்பு பகுதிகளி் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று டிச.8ம் தேதி 566 ஆவது நாளாக மாற்றமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
டாபிக்ஸ்