தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kanal Kannan Arrested: சர்ச்சை வீடியோ - சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது!

Kanal Kannan Arrested: சர்ச்சை வீடியோ - சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது!

Karthikeyan S HT Tamil

Jul 11, 2023, 06:04 PM IST

google News
நாகர்கோவிலில் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவிலில் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகர்கோவிலில் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் கனல் கண்ணன். சண்டை பயிற்சியாளராக பணியாற்றியதோடு மட்டுமல்லாமல், பல திரைப்படங்களில் சண்டை காட்சிகளில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானவர். இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளராகவும் கனல் கண்ணன் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது ட்விட்டர் கணக்கில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார். அதில், கிறிஸ்தவ மதபோதகர் உடையில் வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் இளம்பெண்ணுடன் நடனமாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த வீடியோவின் பின்னணியில் தமிழ் திரைப்பட பாடல் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் அதில் 'வெளிநாட்டு மதத்தின் கலாச்சாரம் இது தான்' எனவும் கனல் கண்ணன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோ விவகாரம் விவாதத்தை கிளப்பியது. மேலும், கனல் கண்ணனின் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் கிறிஸ்தவ மதத்தை அவமரியாதை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த ட்விட்டர் பதிவைக் கண்ட கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியை சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஆஸ்டின் பெனட் என்பவர் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில், அவதூறாக வீடியோ வெளியிட்டுள்ளதை குறிப்பிட்டு புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக இன்று காலை 10 மணிக்கு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கனல் கண்ணன் ஆஜரானார். அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கனல் கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். சாதி, மத ரீதியாக வார்த்தைகளை பயன்படுத்துவது, பிரிவினையை ஏற்படுத்துவது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, விசாரணைக்கு வந்த கனல் கண்ணனை நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றம்சாட்டி இந்து முன்னணியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை