பெண்ணுக்கு செல்போனில் தொந்தரவு – தட்டிக்கேட்ட மாணவர் படுகொலை
Mar 07, 2023, 11:24 AM IST
Student Murder: தோழிக்கு செல்போனில் தொந்தரவு செய்தவரை தட்டிக்கேட்ட மாணவர் மது பாட்டிலால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த கூத்தலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன் சுதந்திரன் (21), இவர் திருப்பத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் சுதந்திரனுடைய தோழிக்கு கல்லல் பகுதியைச் சேர்ந்த மணிபிரகாஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோர் செல்போனில் தொடர்புகொண்டு அவதூறாக பேசியுள்ளனர். இதை அவர் சுதந்திரனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சுதந்திரன் தனது நண்பர்களுடன் சென்று மணி பிரகாஷ் மற்றும் பிரகாஷ் ஆகிய 2 பேரையும் எச்சரித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்துள்ளது.
இந்நிலையில் நேற்று கல்லலில் உள்ள கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. அதில் சுதந்திரன் தனது நண்பர்களுடன் கலந்துகொண்டார். பின்னர் அவர்கள் பைக்கில் வீடு திரும்பினார்கள். அப்போது விநாயகபுரம் அருகே மணிபிரகாஷ், தனது நண்பர் பிரகாஷ் உள்பட சிலருடன் அங்கு போதையில் நின்றுகொண்டிருந்தார். அந்த வழியாக வந்த சுதந்திரனிடம் போதையில் தகராறு செய்துள்ளார். அப்போது அவரை மது பாட்டிலால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் அவருடன் இருந்த நண்பரும் காயமடைந்தார்.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சுதந்திரனை சிகிச்சைக்காக காரைக்குடியில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிசிக்சை வழங்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக அவர் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கல்லல் எஸ்ஐ பிரபாகரன் விசாரணை நடத்தி கல்லலைச் சேர்ந்த மணிபிரகாஷ், பிரகாஷ், சுபாஷ். மணிகண்டன், சரவணன், சஞ்சய் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்