Loksabha Election 2024: ’தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும்’ டிடிவி, ஓபிஎஸ்க்கு பாஜக நிபந்தனையா?
Feb 28, 2024, 08:31 PM IST
“டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தாமரை சின்னத்தில் மட்டும்தான் போட்டியிட வேண்டும் என பாஜக நிபந்தனை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது”
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட கோரி அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை பாஜக வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து வருகிறது. பாஜகவை பொறுத்தவரை அக்கட்சியில் ஜி.கே.வாசனின் தமிழ்மாநிலக் காங்கிரஸ், ஏ.சி.சண்முகத்தின் புதியநீதிக்கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, ஜான் பாண்டியன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழருவி மணியனின் காந்திய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ளன.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உடன் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜக உடனான கூட்டணியை இறுதி செய்யவில்லை. டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவரும் மதுரையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆதரவை தெரிவிப்பார் என கூறப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்தானதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தாமரை சின்னத்தில் மட்டும்தான் போட்டியிட வேண்டும் என பாஜக நிபந்தனை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த தேர்தலிகளில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது, தாமரை சின்னத்தில் போட்டியிட்டு வென்றால் அவர்கள் பாஜக உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள் என்பதால் இதில் பெரும் தயக்கம் உள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ரூட்டி ராமச்சந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதுபோன்ற நிபந்தனை ஏதும் இல்லை; தேர்தல் தேதி அறிவிக்காதபோது அதற்கான அவசியமே இல்லை. எந்த பேச்சுவார்த்தையும் முடிந்த பிந்தான் அறிவிப்போமே தவிர நடக்கும்போது அறிவிக்கமாட்டார்கள் என கூறி உள்ளார்.