புகைப்பட, குறும்பட திருவிழா - பரிசுகளை வெல்ல தமிழக அரசு அழைப்பு
Jan 20, 2023, 11:29 AM IST
தமிழக அரசு நடத்தும் புகைப்பட, குறும்பட விழா போட்டிகளில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவங்கப்பட்ட திறன் மேம்பாட்டிற்கான முன்னெடுப்பே "நான் முதல்வன்" திட்டம். இத்திட்டம் நம் மாநிலத்தில் ஆண்டுக்கு 12 லட்சம் இளைஞர்களுக்கு முன்னேற்றத்திற்கான மாற்றத்தினை தரும் திறன்களை வழங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
திரைப்படம் மற்றும் புகைப்படம் எடுப்பதில் திறமை உள்ளவர்களுக்கு அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக, அவர்களது திறமையை வெளிப்படுத்த "நான் முதல்வன்" திட்டத்தின் மூலமாக குறும்படத் திருவிழா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாநில அளவிலான போட்டியில் 14 வயது முதல் 40 வயதுக்குள் உள்ள அனைவரும் பங்குபெறலாம்.
குறும்படத்திற்கான தலைப்புகள்:
- பள்ளிக் கல்வியில் சிறுவயதிலேயே திறன்மேம்பாடு கல்வி பயிற்சியின் முக்கியத்துவம்.
- பாரம்பரிய திறன்களை டிஜிட்டல் மயமாக்குவது எப்படி இன்றைய சமுதாயத்திற்கு உதவும்?
- தேசிய இலக்குகளை அடைய இளைஞர்களின் சக்தியை தட்டி எழுப்பும் நோக்கில் பயன்படுத்துவதற்கு வேலைவாய்ப்பு திறன்களை வழங்குதல்.
- திறன் மேம்பாட்டு கல்வி வேலைகளின் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைக்கிறது?
- டிஜிட்டல் சகாப்தத்தில் திறன்கள்.
- நடைமுறை திறன்பயிற்சிகளின் முக்கியத்துவம் (தொழில்கல்வி).
இந்த ஆறு தலைப்புகளின் கீழ் உள்ள குறும்படங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தலைப்பு மற்றும் வரவுகளை உள்ளடக்கிய 6 நிமிடங்களுக்கு மிகாமல் குறும்படங்கள் இருக்க வேண்டும். தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் உள்ள குறும்படங்களே ஏற்றுக்கொள்ளப்படும். அது புனைகதை, ஆவணப்படம், அனிமேஷன் போன்ற எந்தவகையிலும் இருக்கலாம்.
முதல் பரிசு ரூ. 50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம். தேர்ந்தேடுக்கப்பட்ட குறும்படத்திற்கு மட்டும் வழங்கப்படும்.
புகைப்படப் போட்டிக்கான தலைப்பு:
"தமிழகத்தில் அழிந்துவரும் பாரம்பரிய திறன்கள்".
உங்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமர்பிப்பதறகான கடைசி நாள் வரும் பிப்ரவரி 1ம் தேதியாகும்.
பங்கேற்பாளர்கள் சமூக ஊடகங்களில் இடுகையிடுவதன் மூலம் பங்கேற்கலாம் மற்றும் soclaimedia@naanmudhalvan.in என்ற மின்னஞ்சலில் சமர்ப்பிக்கலாம்.
இதில் வெற்றிப்பெறும் குறும்படதாரர்களுக்கு "நான்முதல்வன்" திட்டம் அல்லது புகழ்பெற்ற திரைப்படம் & தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்களுடன் 3 மாத இன்டெர்ன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்புகளும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.naanmudhalvan.tn.gov.in இணையதள முகவரியை பார்க்கவும்.
டாபிக்ஸ்