Vikravandi: சாராயம் குடித்த 7 பேருக்கு உடல்நலம் பாதிப்பு..வாக்குப்பதிவுக்கு இடையே விக்கிரவாண்டியில் பரபரப்பு!
Jul 10, 2024, 11:48 PM IST
Vikravandi: விக்கிரவாண்டி பகுதியில் சாராயம் குடித்த 7 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து வாங்கி வரப்பட்ட சாராயத்தை குடித்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திமுகவைச் சேர்ந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலில் போட்டியிடவில்லை என அதிமுக ஒதுங்கிக் கொண்ட நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஜூலை 10) காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காலை முதலே வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்டவரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.
வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட டி.கொசபாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
சாராயம் குடித்து 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
வாக்குப்பதிவையொட்டி அந்தப் பகுதிகளில் நேற்று முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக வாங்கி வரப்பட்ட சாராயத்தை முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள ஆண்கள் குடித்துள்ளனர். சாராயத்தை குடித்த 7 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக தற்போது விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி சாராயம்
வாக்குப்பதிவு நாளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டு இருப்பதால் புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக சாராயம் கடத்தி வரப்பட்டு அங்கு கொடுக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கஞ்சனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம்
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரத்தில் கடந்த ஜூன் 18 ஆம் தேதி மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 65 பேர் உயிரிழந்தனர். 8 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்லைகளை ஏற்படுத்தியது.
உயிரிழப்பு 66 ஆக அதிகரிப்பு
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரத்தில் ஏற்கனவே 65 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சிவராமன் என்பவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதன் மூலமாக விஷச்சாராயம் குடித்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய 66 பேர் உயிரிழந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் மீண்டும் சாராயம் குடித்து 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்