தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு -உற்சாகத்தில் மாணவர்கள்!
Jun 13, 2022, 09:21 AM IST
கோடை விடுமுறைக்கு பின், மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கும், 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
சென்னை : தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கும், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளிலேயே, விலையில்லா பாடப்புத்தகங்கள் போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரையில் 8 பாடவேளைகளாக ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வகுப்புகள் நடத்த திட்டமிட்டு, அதற்கான அட்டவணையை கல்வித்துறை நேற்று முன்தினம் வெளியிட்டது. ஆனால் இது திட்டமிடலுக்கான நேரம்தான் என்றும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவுடன் கலந்தாலோசித்து பள்ளிகளின் அமைவிடம், வகுப்புகள் தொடங்கும், முடிக்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கி நடைபெற இருக்கின்றன. அனைத்து பள்ளிகளிலும் காலை வணக்க கூட்டங்கள் கண்டிப்பாக நடத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை அதற்கு நேரம் ஒதுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று இன்னும் குறையாத நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் நடத்தப்பட இருக்கின்றன. பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்வது, அவர்கள் முககவசம் அணிந்து வருவது போன்றவற்றை தொடர்ந்து பின்பற்றவே பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 20-ந்தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 27 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.
டாபிக்ஸ்