Savukku Shankar Release:கடலூர் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு
Nov 19, 2022, 11:07 AM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர் உயர் நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது மதுரை உயர்நீதிமன்றம்.
இது குறித்து விசாரணை செய்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு சவுக்கு சங்கர் நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக கூறி 6 மாத சிறை தண்டனையை வழங்கியது.
இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் கடலூர் மத்திய சிறையில் சிறையில் சங்கர் அடைக்கப்பட்டார்.
இந்த சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆதாரமில்லாமல் எப்படி விமர்சனம் வைத்தார்? என்று கேள்வியெழுப்பி சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மீது மேலும் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் சிறையில் வைத்தே அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று (நவ 18) இது தொடர்பான வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் 4 வழக்குகளிலிருந்தும் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும், வழக்கு குறித்து பொது வெளியில் எங்கும் பேசக்கூடாது எனவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இந்த நிலையில் இன்று(நவ 19) கடலூர் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
டாபிக்ஸ்