தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  S.satyamurti: தமிழக காங்கிரஸ் கட்சியின் ஆளுமை.. சத்திய மூரத்தி பிறந்த தினம்!

S.Satyamurti: தமிழக காங்கிரஸ் கட்சியின் ஆளுமை.. சத்திய மூரத்தி பிறந்த தினம்!

Aug 19, 2023, 04:45 AM IST

google News
இந்தியா சுதந்திரம் பெற்ற போது காமராஜர், முதலில் சத்தியமூர்த்தி வீட்டுக்கு சென்று, சுதந்திரக்கொடியை ஏற்றினார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற போது காமராஜர், முதலில் சத்தியமூர்த்தி வீட்டுக்கு சென்று, சுதந்திரக்கொடியை ஏற்றினார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது காமராஜர், முதலில் சத்தியமூர்த்தி வீட்டுக்கு சென்று, சுதந்திரக்கொடியை ஏற்றினார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆளுமையாக கருதப்படும் சத்தியமூர்த்தி பிறந்த நாள் இன்று இந்த நாளில் அவர் குறித்த சில தகவல்களை திரும்பி பார்க்கலாம்.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் 1887ம் ஆண்டு ஆகஸ்டு 19ம் தேதி பிறந்தவர். அவருக்கு எட்டு சகோதரர்கள். அவரது இளம் வயதிலேயே அவரது தந்தை மரணம் அடைந்ததால் தனது தாய் மற்றும் சகோதரர்களை பார்த்துக்கொள்ளும் பொறுப்புக்கு இவரிடம் வந்தது. ஆனால் கடும் உழைப்புக்கு மத்தியில் 1906ம் ஆண்டு, ‘சென்னை கிறித்துவ கல்லூரியில்’ வரலாற்றுத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.

இதைத்தொடர்ந்து சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார். இதைத்தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரான ஸ்ரீ.எஸ்.ஸ்ரீனிவாச ஐயங்காரின் கீழ் சட்டப் பயிற்சி மேற்கொண்டார். சத்திய மூர்த்தி கல்லூரியில் படித்த நாட்களிலேயே கல்லூரி தேர்தல்களில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். அவருக்கு மக்களாட்சி முறையில் ஆழ்ந்த பிடிப்பு ஏற்பட்டது. இதுவே பின் நாட்களில் சத்தியமூர்த்தியை அரசியலில் பக்கம் திருப்பியது.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு தமிழக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக சேர்ந்த பின் தன் கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்தார். காங்கிரசின் பிரதிநிதியாக மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்த்திருத்தம் மற்றும் ரவுலட் சட்டத்திற்கு எதிரான இணை நாடாளுமன்றக் குழுவில் வாதாட, இங்கிலாந்து அனுப்பப்பட்டார்.

பின் 1923ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராகவும் பொறுப்பேற்றார். சி.ஆர்.தாஸ் மற்றும் மோதிலால் நேரு போன்றவர்கள் தொடங்கிய ‘சுயராஜ்ஜியக் கட்சி’யில் தன்னையும் இணைத்துக் கொண்டார். இந்திய பாராளுமன்ற ஜனநாயகம் அமைவதற்கு உறுதுணையாக இருந்தார். 1937ம் ஆண்டு நடைபெற்ற சென்னை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வென்றவர் சென்னை மாகாண கவுன்சிலரானார்.

1939ம் ஆண்டு சென்னை மாநகராட்சி தலைவராக பணியாற்றியபொழுது, சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, பிரிட்டிஷ் அரசுடன் போராடி பூண்டி நீர்த்தேக்கத்திற்கான ஒப்புதல் பெற்று, பணிகள் உடனே தொடரவும் தீவிரம் காட்டினார்.

சுதேசி இயக்கத்தில் தீவிர செயல்பட்டதால் அவர், 1940ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 1942ம் ஆண்டு நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது கைதானார். சத்திய மூர்த்தி, 1954 முதல் 1963 வரை தமிழ் நாட்டின் தலைசிறந்த முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு ஒரு சிறந்த அரசியல் வழிகாட்டியாக திகழ்ந்தவர். திறம்பட செயல்பட்ட காமராஜரின் ஆட்சிக்காலம் தமிழக அரசியலில் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது.

காமராஜரை தலைவராக்கினார் சத்தியமூர்த்தி.

1936 ஆம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தியமூர்த்தி, காமராஜரை பொது செயலாளராகவும் நியமித்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற போது காமராஜர், முதலில் சத்தியமூர்த்தி வீட்டுக்கு சென்று, சுதந்திரக்கொடியை ஏற்றினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஆற்றிய தொண்டை நினைவுகூரும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமையகத்திற்கு ‘சத்தியமூர்த்தி பவன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1942 ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்தமையால் கைது செய்யப்பட்டு நாக்பூரிலுள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், முதுகு தண்டு காயத்தினால் அவதிப்பட்ட சத்தியமூர்த்தி, 1943ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி, சென்னை மருத்துவமனையில் தன்னுடைய 55 வது வயதில் காலமானார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி