EPS: ’பாஜக, காங். கட்சிகள் தமிழ்நாட்டை மாற்றான் பிள்ளைகளாக பார்க்கின்றன!’ ஈபிஎஸ்!
Dec 26, 2023, 02:08 PM IST
”ADMK Genralbody Meet: பாஜக உடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த ஈபிஎஸின் பேச்சை கேட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி வரவேற்பு தெரிவித்தனர்”
சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, அதிமுக ஏன் மத்திய அரசை கண்டிப்பது இல்லை என்று கேட்கிறார்கள். இது மக்கள் பிரச்னை, இதனை அரசியல் ஆக்க கூடாது. நீங்கள் உங்கள் மாநிலத்தில் இருந்து தேவையான நிதியை ஒதுக்கி செயல்பட்டு இருக்க வேண்டும்.மத்திய அரசை குறை சொல்லி மாநில அரசு தப்பிக்க பார்க்கிறது. மத்திய அரசும் மக்கள் பிரச்னையை உணர்ந்து தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மத்திய அரசிடம் இருந்து நிதி வரும் என்று எதிர்பார்க்காமல் மாநில நிதியில் இருந்து மக்களை காப்பற்றியது அதிமுக ஆட்சி, 2007-08ஆம் ஆண்டில் மத்தியிலும், மாநிலத்திலும் திமுக-காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது ஏற்பட்ட கனமழையில் 1139 கோடி நிவாரணம் கேட்டபோது 142கோடிதான் கொடுத்தார்கள். 2008-09 நிஷா புயலின்போது 3789 கோடி கேட்டபோது வெறும் 570 கோடிதான் கொடுத்தார்கள். கேட்ட நிதியை மத்திய அரசு எந்த காலத்திலும் கொடுத்த சரித்திரமே கிடையாது. அதிமுக ஆட்சியிலும் அதே நிலைதான்.
2011-12இல் அம்மா அவர்கள் முதல்வராக இருந்தபோது 5248 கோடி நிவாரணம் கேட்டபோது காங்கிரஸ் ஆட்சி வெறும் 500 கோடியைத்தான் நிவாரணமாக கொடுத்தார்கள். 2012-13 வறட்சியின்போது 19,988 கோடி வறட்சி நிவாரணம் கேட்டோம் ஆனால் 655 கோடிதான் மத்திய அரசு ஒதுக்கியது.
2015-16 வெள்ளத்தின்போது 25,919 கோடி கேட்டபோது மத்திய பாஜக அரசாங்கம் கொடுத்தது 1737 கோடிதான். 2016-17ஆம் ஆண்டில் வறட்சியின்போது 39,565 கோடி கேட்டபோது அவர்கள் தந்த தொகை 1748 கோடி, 2016-17 வர்தா புயலின்போது நாம் கேட்ட நிதி 22,573 கோடி ஆனால் மத்திய பாஜக அரசு தந்தது 776 கோடிதான். 2017-18 ஒகி புயலின்போது 9302 கோடி கேட்டபோது மத்திய அரசு தந்தது 133 கோடி, 2018-19 கஜா புயலின்போது 14899 கோடி கேட்டோம், ஆனால் கொடுத்தது 1146 கோடிதான் கொடுத்தது. 2020 ஆம் ஆண்டில் நிவர், புரவி ஆகிய 2 புயலும் நாம் கேட்ட நிதியை மத்திய அரசாங்கம் தரவில்லை. ஆக மத்தியில் காங்கிரஸ் ஆண்டாலும் சரி, பாஜக ஆண்டாலும் சரி மாற்றான் தாய் பிள்ளைகளை போலத்தான் தமிழ்நாட்டை பார்க்கிறார்கள். கேட்ட நிதியை எப்போதும் மத்திய அரசு கொடுத்ததாக வரலாறு கிடையாது. அதிமுகவை பொறுத்தவரை மத்திய அரசு மனிதாபிமானத்தோடு மாநில அரசுக்கு தேவையான நிதி உதவியை அளிக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு.
நாம் கூட்டணியில் அங்கம் வகித்து வெற்றி பெற்றுவிடுகிறோம். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த உடன் தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமான செயலை செய்யும் போது கூட்டணி தர்மம் என்று தள்ளிவிட்டு விடுகிறார்கள். இதனால் நாம் பாதிக்கிறோம். இனி அந்த நிலை கிடையாது. தேசிய கட்சிகளை நம்பி பிரயோஜனம் இல்லை. அதிமுகவை பொறுத்தவரை வாக்களிக்கும் மக்கள்தான் எஜமானர்கள். நாடாளுமன்றத்தில் அதிமுகவினர் மக்களுக்காக குரல் கொடுப்பார்கள்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அதிமுக தெளிவுபடுத்திவிட்டது. ஏற்கெனவே 25-9-2023 அன்று தலைமை கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி அதிமுக இனி பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டோம் என ஈபிஎஸ் பேசினார்.
பாஜக உடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த ஈபிஎஸின் பேச்சை கேட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி வரவேற்பு தெரிவித்தனர்.