Edappadi Palaniswami: 'மனசாட்சி என்பது கொஞ்சம் இருந்தால் பதவி விலகுங்கள்' எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்
Jun 21, 2024, 08:02 PM IST
Edappadi Palaniswami: "கள்ளச்சாராய மரணங்கள் குறித்த விவாதம் நடத்தக்கோரி கழக சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டபோது அவையில் இல்லாமல் ஒளிந்துகொண்டிருந்த மு.க.ஸ்டாலின் "ஜனநாயக மாண்பு காப்பாளர்" என்று ஒரு நாடகமாடி, கள்ளச்சாராய மரணங்கள் குறித்த முற்றிலும் ஏற்கத்தகாத ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
Edappadi Palaniswami: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில் உயிரிழந்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக ஆளும் திமுக அரசுக்கு கடும் கண்டஉம் தெரிவித்துள்ளது.
நீங்கள் அதிகாரிகளை மாற்றவே 50 உயிர்கள் பலியாக வேண்டுமா? இப்போது நீங்கள் வாசிக்கும் பட்டியலால் போன 50 உயிர்கள் மீண்டும் வந்துவிடுமா?
மனசாட்சி என்பது கொஞ்சமும் இருந்தால் பதவி விலகுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,
"கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்த விவாதம் நடத்தக்கோரி கழக சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டபோது அவையில் இல்லாமல் ஒளிந்துகொண்டிருந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சபாநாயகர் எங்களை வலுக்கட்டாயமாக அராஜகப் போக்குடன் வெளியேற்றிய பிறகு வந்து, தான் "ஜனநாயக மாண்பு காப்பாளர்" என்று ஒரு நாடகமாடி, கள்ளச்சாராய மரணங்கள் குறித்த முற்றிலும் ஏற்கத்தகாத ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
முதல்வர் சொல்வது நகைப்புக்குரியது
அஇஅதிமுகவினர் சபையில் இல்லாதபோது வந்து, தான் ஓடி ஒளியவில்லை என்று விடியா திமுக முதல்வர் சொல்வது நகைப்புக்குரியது.
சென்ற ஆண்டு செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 23 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த பிறகாவது, இந்த விடியா திமுக அரசு கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று கள்ளக்குறிச்சியில் இச்சோகம் நிகழ்ந்திருக்காது. எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு பொறுப்பு திரு. ஸ்டாலின் தான்.
மூன்றாண்டுகள் கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, இப்போது வந்து "நான் அதிகாரிகளை மாற்றிவிட்டேன்" என்று சொல்வது பொறுப்பற்றத் தன்மையின் உச்சம்.
மக்கள் நலன் ஒன்றே அதிமுகவின் அரசியல் ஆதாயம். அந்த ஆதாயம் நிறைவேற நாங்கள் அனைத்து ஜனநாயக வழிகளிலும் போராடுவோம்.
18.02.2017 அன்று நீங்கள் சட்டப்பேரவையில் அரங்கேற்றிய அராஜகம், தமிழ்நாடு சட்டப்பேரவை கண்டிராத ஜனநாயகப் படுகொலை. ஜனநாயக மாண்பைப் பற்றி பேச திமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை.
பதவி விலகுங்கள்
நீங்கள் அதிகாரிகளை மாற்றவே 50 உயிர்கள் பலியாக வேண்டுமா? இப்போது நீங்கள் வாசிக்கும் பட்டியலால் போன 50 உயிர்கள் மீண்டும் வந்துவிடுமா?
மனசாட்சி என்பது கொஞ்சமும் இருந்தால் Resign Stalin" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மரணம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்
முன்னதாக இன்று காலை கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில், “இந்தச் சம்பவம் பற்றிய தகவல் எனக்குத் தெரிந்தவுடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான மாண்புமிகு திரு. எ.வ.வேலு மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் ஆகியோரை உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிட்டேன். அவர்களும் 19-ஆம் தேதி இரவே அங்கு நேரில் உள்துறைச் செயலாளரையும், டி.ஜி.பி.யையும் நேரில் செல்ல உத்தரவிட்டிருந்தேன். அவர்களை இரண்டொரு நாளில் விசாரணை அறிக்கையைக் கொடுக்கச் சொல்லி இருக்கிறேன். அந்த அறிக்கை கிடைத்ததும் அதன் மீதான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவேன் என உறுதி அளிக்கிறேன்.” என கூறி இருந்தார்.
டாஸ்மாக் வருவாய் 45 ஆயிரத்து 855 ஆயிரம் கோடி
இதற்கிடையில் பிற்பகலில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான விவாதத்தில் அமைச்சர் முத்துசாமி கேள்விகளுக்கு பதில் அளித்து உரையாற்றினார். அப்போது அரசு சார்பில் வெளியிடப்பட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தமிழ்நாட்டில் கடந்த 2023-24ஆம் ஆண்டில் 45 ஆயிரத்து 855 கோடி ரூபாய் டாஸ்மாக் மது விற்பனை மூலம் கிடைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 1,734.54 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9