Rain Alert: ’மக்களே உஷார்! இன்று காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!’
Dec 10, 2023, 07:59 AM IST
”Rain Alert:அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரு தினங்களாக மேற்கு தொடர்சி மலையையொட்டி மாவட்டங்களில் மழை”
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு இடங்களில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த நிலையில், டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் தொடர் மழை பெய்தது.
இதனை அடுத்து அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரு தினங்களாக மேற்கு தொடர்சி மலையையொட்டி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த சுழற்சியானது இன்றைய தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில், இன்று (டிசம்பர் 10) காலை 10 மணி வரை கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னல் உடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் உடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் நேற்றே எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.