Rahul Gandhi: என் தந்தையை இழந்ததுபோல் எனது தேசத்தை இழக்கமாட்டேன் - ராகுல்
Sep 07, 2022, 12:13 PM IST
என் தந்தையை இழந்ததுபோல் எனது தேசத்தை இழக்கமாட்டேன் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவித்துள்ளார்.
சென்னை: வெறுப்பு அரசியலால் என் தந்தையை இழந்தேன், ஆனால் எனது தேசத்தை இழக்க மாட்டேன் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
'பாரத் ஜோடோ' யாத்திரை என்ற இந்திய ஒற்றுமை நடைபயணம் இன்று கன்னியாகுமரியில் தொடங்கவுள்ளது. இதற்காக தமிழகம் வந்துள்ள ராகுல், இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் தனது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் அங்கு தந்தையின் புகைப்படத்தின் முன் அமர்ந்து 25 நிமிடம் தியானம் செய்தார். தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டுவைத்து, காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார்.
அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ராகுல், "வெறுப்பு அரசியல் மற்றும் பிரிவினைவாத அரசியலால் எனது தந்தையை இழந்தேன். ஆனால் அதேபோல் அதே சக்திகளுக்கு எனது தேசத்தை இழக்க மாட்டேன். வெறுப்புணர்வை நிச்சயமாக அன்பு வெல்லும். பயத்தை நம்பிக்கை வீழ்த்தும். ஒன்றிணைந்தால் நாம் மீள்வோம்." என்று பதிவிட்டுள்ளார்.
இன்று மாலை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து ராகுல் பங்கேற்கும் பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,570 கி.மீ. தொலைவுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.
டாபிக்ஸ்