தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Liquor Death: தமிழ்நாட்டில் கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலி - புதுச்சேரி கலால் துணை ஆணையர் இடமாற்றம்

Liquor Death: தமிழ்நாட்டில் கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலி - புதுச்சேரி கலால் துணை ஆணையர் இடமாற்றம்

Kathiravan V HT Tamil

May 18, 2023, 07:56 PM IST

google News
தமிழ்நாட்டில் ஏற்பட்ட மரணங்களுக்கு புதுவை அரசு ஏற்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி இருந்தார்.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட மரணங்களுக்கு புதுவை அரசு ஏற்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி இருந்தார்.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மரணங்களுக்கு புதுவை அரசு ஏற்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி இருந்தார்.

தமிழ்நாட்டில் நடந்த கள்ளச்சாராய மரணங்களுக்கு புதுச்சேரியில் இருந்து கடத்தப்பட்ட கள்ளச்சாராயமே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளச்சாராய மரணம்

கள்ளச்சாராயம் குடித்ததன் காரணமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 14 பேர் செங்கல்பட்டில் 8 பேர் என 22 பேர் தமிழ்நாட்டில் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

டிஜிபி விளக்கம்

மேலும் இதன் எதிரொலியாக தமிழகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்த நிலையில், மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் ஆகும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்திருந்தார்.

டிஜிபி சைலேந்திரபாபு- சாராயம் - கோப்புப்படம்

மேலும் விளம்பூர் விஜி, விஷச்சாராயத்தை பாண்டிச்சேரி ஏழுமலையிடமிருந்து வாங்கியுள்ளார். ஆக சித்தாமூரில் விற்கப்பட்ட விஷச்சாராயமும். மரக்காணத்தில் விற்கப்பட்ட விஷச்சாராயமும் ஓரிடத்திலிருந்து வந்தது என புலனாகிறது என்றும் கூறி இருந்தார்.

சஸ்பெண்ட் முதல் இடமற்றம் வரை

கள்ளச்சாரய மரணத்தின் எதிரொலியாக விழுப்புரம் எஸ்.பி.ஸ்ரீநாதா மற்றும் மதுவிலக்கு தடுப்பு காவல் பிரிவின் டிஎஸ்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், 22 பேர் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கும் மாற்றப்பட்டது. மேலும் செங்கபட்டு ஆட்சியர், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகளையும் தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்திருந்தது.

புதுச்சேரியில் வெடித்த கள்ளச்சாராய விவகாரம்

இந்த நிலையில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, புதுவையில் கள்ளச்சாராயம் இல்லை என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்திருக்கிறார். மரக்காணத்தில் கள்ளச்சாராய சில்லறை விற்பனை செய்த இருவர், அதை புதுவையைச் சேர்ந்த இருவரிடம் வாங்கியதாக வாக்குமூலம் கொடுத்து கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

 புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி - கோப்புபடம்

கள்ளச்சாராயத்தை புதுவையிலிருந்து கடத்திச் சென்று தமிழகத்தில் விற்றதால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கான முழு பொறுப்பையும் புதுவை அரசு ஏற்க வேண்டும். கலால்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமியும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழகத்தில் காவல்துறை, கலால்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புதுவையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளச்சாராயப் பேர்வழிகளுக்கு புதுவை அரசு உடந்தையாக இருக்கிறது.

காவல்துறை லஞ்சம் வாங்கிக்கொண்டு கள்ளச்சாராய விற்பனையை அரசு வேடிக்கை பார்க்கிறது. கலால்துறை அதிகாரிகள் மாதந்தோறும் பணம் வசூல் செய்து, முதலமைச்சர் ரங்கசாமிக்கு நேரடியாகப் பணம் தருவதாகப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகிறேன். தற்போது தமிழகத்தில் நடந்த உயிரிழப்புக்கு புதுவை அரசுதான் பொறுப்பு என குற்றம்சாட்டி இருந்தார்.

போராட்டம்

கொக்குபார்க் வளாகத்தில் நேரு எம்.எல்.ஏ தலைமையில் பொதுநல அமைப்புகள் ஒன்று கூடி கலால்துறை அலுவலகம் வரை சென்று முற்றுமையிட முயன்றனர். போலீசார் தடுத்து நிறுத்தியதால், கலால் துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர் போலீசார் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரியில் நடக்கும் போராட்டங்களின் எதிரொலியாக புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகரை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி