தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dmk: மக்களவை தேர்தலுக்கு தயாராகும் திமுக! பொங்கலுக்கு பிறகு கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த திட்டம்!

DMK: மக்களவை தேர்தலுக்கு தயாராகும் திமுக! பொங்கலுக்கு பிறகு கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த திட்டம்!

Kathiravan V HT Tamil

Dec 31, 2023, 02:31 PM IST

google News
”மக்கள் நீதி மய்யம் கட்சி கோவை நாடாளுமன்றத் தொகுதியை கேட்பதால், அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேறு இடத்தை தர திமுக தலைமை பரிசீலனை செய்வதாக கூறப்படுகிறது”
”மக்கள் நீதி மய்யம் கட்சி கோவை நாடாளுமன்றத் தொகுதியை கேட்பதால், அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேறு இடத்தை தர திமுக தலைமை பரிசீலனை செய்வதாக கூறப்படுகிறது”

”மக்கள் நீதி மய்யம் கட்சி கோவை நாடாளுமன்றத் தொகுதியை கேட்பதால், அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேறு இடத்தை தர திமுக தலைமை பரிசீலனை செய்வதாக கூறப்படுகிறது”

வரும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வரும் 2024ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில் வரும் ஜனவரி 4ஆம் தேதி அன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநிலத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு பிறகு ஜனவரி 3ஆவது வாரத்தில் திமுக உடன் தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழ்நாட்டை பொறுத்தவரை ’இந்தியா’ கூட்டணிக்கு திமுக தலைமை தாங்குகிறது. நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு பிப்ரவரி இறுதி வாரம் மற்றும் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு உள்ள நிலையில் வரும் ஜனவரி மாதம் 3ஆவது வாரத்தில் தொகுதிப்பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கி பிப்ரவரி இரண்டாம் வாரத்திற்குள் முழுமையாக முடிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஏற்கெனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஒரு சுற்று பேச்சுவார்த்தையை திமுக நடத்தி முடித்து உள்ளது. 

திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி புதிதாக இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் சில மாற்றங்களை செய்ய திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

வடகிழக்கு பருவமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திமுக மாநில இளைஞரணி மாநாடு ஜனவரி 21ஆம் தேதி நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.  மார்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 இடங்கள், விசிகவுக்கு 2 இடங்கள், மதிமுகவுக்கு ஒரு இடம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு இடம், இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

மக்கள் நீதி மய்யம் கட்சி கோவை நாடாளுமன்றத் தொகுதியை கேட்பதால், அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேறு இடத்தை தர திமுக தலைமை பரிசீலனை செய்வதாக கூறப்படுகிறது. கடந்த முறையை காட்டிலும் இந்த முறை கூடுதல் இடங்களில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளது. 25 இடம் வரை திமுக வேட்பாளர்களை நிறுத்த தலைமை திட்டமிட்டுள்ளது, கடந்த முறை வாங்கிய தொகுதிகளை அப்படியே பெற கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளது. 

விழுப்புரம், திருவள்ளூர் தொகுதிகளை விசிக கேட்பதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்கும் கடந்த முறை கொடுத்த இடங்களை காட்டிலும் வேறு இடங்களை தர திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அடுத்த செய்தி