Ponmudy Case: வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் பொன்முடி மேல்முறையீடு!
Jan 03, 2024, 04:15 PM IST
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு செய்துள்ளாா்.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்துக்குவித்தாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தாா். அபராதத் தொகையை செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் கூடுதலாக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தொிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம், பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.
மேலும், இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜனவாி 22ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ இருவரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று அவகாசம் வழங்கிய நீதிபதி, 30 நாட்கள் அவகாசத்திற்குள் சரணடையாவிட்டால், தண்டனையை அனுபவிக்கச் செய்வதற்கான நடைமுறைகளை விழுப்புரம் நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தாா்.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் பொன்முடி சாா்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தண்டனையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தண்டனையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பொன்முடி தரப்பு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்