Pongal 2024: ’பிறப்பு, இறப்பை சாராத திருநாள்’ சங்ககாலத்தில் பொங்கல் விழா! தொ.ப சொல்லும் கூறுகள்!
Jan 15, 2024, 05:25 AM IST
”பிறப்பு, இறப்பு உள்ளிட்ட தீட்டுக்களால் பாதிக்கப்படாத சமயம் சாராத நிகழ்வு என பொங்கல் திருநாளை அடையாளப்படுத்துகிறார் மானுடவியல் ஆய்வாளர் தொ.பரமசிவன்”
தமிழர்களின் பண்பாட்டு திருநாளான பொங்கல் பண்டிகை நெடுகாலமாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி தமிழர்கள் செறிந்து வாழும் உலகநாடுகளிலும் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் பரவி உள்ளது.
சங்க காலத்தை குறிக்கும் கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 4 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டம் தமிழ்நாட்டில் செழிப்பான தமிழிலக்கியங்களை நமக்கு கொண்டுத்து விட்டு சென்றுள்ளது. விவசாயம் மூலம் துடிப்பான துடிப்பான கலாச்சாரம் உருவாகத் தொடங்கிய இக்காலத்தில் சூரியனையும், பயிர்த் தொழில் செழிக்க துணைபுரியும் கால் நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக இருந்துள்ளது என்பதற்கு சங்க இலங்க்கியங்களில் இருந்து சான்றுகளை கூற முடியும்.
‘அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல….’ எனத் தொடங்கும் புறநானூறின் 22ஆம் பாடல் மூலம் இதனை அறிய முடியும்.
நற்றிணையில் வரும் ‘தைஇத் திங்கள் தண்கயம் படியும்’ என்ற வரிகளும், குறுந்தொகையில் வரும் 'தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ என்ற வரியும், புறநானூற்றில் வரும் ‘தைஇத் திங்கள் தண்கயம் போல்’ என்ற வரிகளும், ஐங்குறுநூறு இலக்கியத்தில் வரும் ‘தைஇத் திங்கள் தண்கயம் போது’ என்ற வரிகளும், கலித்தொகையில் வரும் ‘தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ’ என்ற வரிகளும் சங்ககாலம் தொட்டே தைத்திருநாள் செழிப்பாக கொண்டாடப்பட்ட விழாவாக இருந்ததை அறிய முடிகிறது.
தை பொங்கல் குறித்து தனது அறியப்படாத தமிழகம் என்ற நூலில் குறிப்பிடும் மானுடவியல் ஆய்வாளர் தொ.பரமசிவன், “தமிழர்களின் தனிப்பெரும் திருவிழாவாக திகழும் தைப்பொங்கல், தேசிய இனத்துக்குரிய அடையாளம் ஒன்றை தமிழர்களுக்கு வழங்கும் திருவிழாவாக உள்ளதாக கூறுகிறார். பிறப்பு, இறப்பு உள்ளிட்ட தீட்டுக்களால் பாதிக்கப்படாத சமயம் சாராத நிகழ்வு” என்றும் பொங்கல் திருநாள் குறித்து அவர் குறிப்பிடுகிறார்.
டாபிக்ஸ்