HT Tamil Exclusive: ‘இதற்கு மேல் சக்தி இல்லை’ பொள்ளாச்சி நர்மதா சிறப்பு பேட்டி!
Dec 24, 2022, 12:14 PM IST
POLLACHI Municipal DMK Councillor Narmatha Interview: ‘கட்சி தலைமை சிறப்பாக இருக்கிறது. கீழ் மட்டத்தில் இருப்பவர்களால் சங்கடங்கள் இருக்கத்தான் செய்கிறது. தலைமை அதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது’ -நர்மதா
35 ஆண்டுகளாக திமுக வெற்றி பெறாத பொள்ளாச்சி நகராட்சியின் 7 வது வார்டில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. 25 வயதான இளம் வேட்பாளர் நர்மதா, அங்கு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். பொறுப்பேற்ற 10 மாதத்தில், ‘இது எனக்கான களம் இல்லை’ என்று, தன் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் நர்மதா. உண்மையில் நடந்தது என்ன? ஏன் இந்த முடிவுக்கு வந்தார் நர்மதா? இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையத்திற்கு நர்மதா அளித்த சிறப்பு பேட்டி இதோ:
கேள்வி: திடீரென கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய என்ன காரணம்?
நர்மதா: எனக்கு 25 வயதாகிறது. புதுச்சேரியில் எம்.ஏ., அரசியல் அறிவியல் படித்திக்கிறேன். சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் ஐஏஎஸ் பயிற்சி படிப்பு 2 ஆண்டுகள் முடித்திருந்த நிலையில் தான் எனக்கு கவுன்சிலராக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய அப்பா அரசியலில் இருப்பதால், இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. புதுச்சேரியில் படித்த போது, புதுச்சேரி திமுக மாணவர் அணி தலைவராக அங்கு பணியாற்றியிருக்கிறேன். கட்சியிலிருந்து கேட்டுக்கொண்டதால் போட்டியிட்டேன். இது எனக்கான களம் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். அந்த சூழலை உணர்ந்ததால், திரும்ப படிக்க போகலாம் என்பதால், இந்த முடிவுக்கு வந்தேன்.
கேள்வி: இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறுகிறார்கள். உங்களை போன்ற இளைஞர்கள் இது சரியான களம் இல்லை என்று கூற காரணம் என்ன?
நர்மதா: இப்போ இருக்கிற அரசியல் கட்சி… நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் பாஜக செல்வதாக சமூக வலைதளங்களில் சிலர் பதிவிடுவதை பார்த்தேன். நான் ஒரு பெரியாரிஸ்ட். நான் வலதுசாரி பக்கம் செல்ல வாய்ப்பே இல்லை. எப்போதும் நான் இடது சாரி ஆதரவாளர் தான். கட்சி மீது எனக்கு வருத்தமில்லை. இங்கு எனக்கான இடமில்லை என்பதால் தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். சுந்திரமாக செயல்பட இன்னும் நல்ல களம் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். நான் வேறு எந்த வேலைக்கும் போகவில்லை. எந்த அரசு வேலையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. நான் தங்கப்பதக்கம் பெற்ற மாணவி. எனக்கு எந்த சிபாரிசும் தேவையும் இல்லை. நான் யுபிஎஸ்சி.,க்கு மீண்டும் முயற்சிக்கப் போகிறேன். மற்றபடி எந்த சர்சை கருத்தையும் தெரிவிக்கப் போவதில்லை.
கேள்வி: ஆளுங்கட்சி கவுன்சிலராக இருக்கும் உங்களுக்கு என்ன இடையூறு வந்துவிட்டது?
நர்மதா: படிப்பை தொடரலாம் என்பது எனது முதல் நோக்கம். அரசியலில் இருந்து சாதிக்க முடியும் என்று நான் நினைக்கும் விசயங்களை, படித்து முடித்து சாதிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
கேள்வி: உண்மையை சொல்லுங்க, திமுகவில் பாரபட்சம் இருக்கிறதா?
நர்மதா: கட்சி தலைமை சிறப்பாக இருக்கிறது. கீழ் மட்டத்தில் இருப்பவர்களால் சங்கடங்கள் இருக்கத்தான் செய்கிறது. தலைமை அதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. முதல்வர், அதை சரியாக கொண்டு செல்வார் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. ஒரு கவுன்சிலரா இருந்து செய்வதை விட, இன்னும் பெரிய இடத்தில் அமர்ந்து செய்யலாம் என்று நினைக்கிறேன்.
கேள்வி: இந்த 10 மாதத்தில் நீங்கள் செய்ய நினைத்த எதுவும் நடக்கவில்லையா?
நர்மதா: 10 மாதத்தில் நிதி நெருக்கடியால் எதையும் அவர்களால் வழங்க முடியவில்லை. ஆனால், ஒரு இளைஞராக போட்டியிட்டதில் இருந்து என்னை பலரும் ஊக்குவித்தார்கள். ஏதோ வந்தேன், போனேன் என்று இருக்க கூடாது என்பதற்காக என்னுடைய சொந்த பணத்தை செலவு செய்து சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு தான் போக வேண்டும், என்பதற்காக தான் இந்த காலத்தை எடுத்துக்கொண்டேன். அதை முடித்தும் விட்டேன். அதற்கான சக்தி இருந்ததால் செய்துவிட்டோம். இதற்கும் மேலும் செய்யும் சக்தி என்னிடம் இல்லை.
கேள்வி: உங்களை நம்பி ஓட்டளித்த மக்களின் நம்பிக்கையை வீணடிக்கிறோம் என்று தோன்றவில்லையா?
நர்மதா: வார்டு மக்கள் அனைவரையும் நேரில் சந்தித்து என் சூழல்நிலையை விளக்கினேன். நான் கவுன்சிலராக இருந்ததிலும், பதவி விலகியதிலும் இருக்கும் நியாயத்தை அறிந்து மகிழ்ந்தனர். நான் ஒரு நல்ல இடத்திற்கு வர வேண்டும் என்பதால் ,அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இப்போ வரை வார்டு மக்கள் என் வீட்டுக்கு வந்து வாழ்த்து தான் தெரிவித்துச் செல்கின்றனர். அப்பா , திமுகவை தாண்டி திராவிடர் கழக்கத்தில் உள்ளார். பொதுப்பணிகளை செய்து வருகிறார். கவுன்சிலராக இல்லை என்றாலும் மக்கள் பணியை செய்வோம். அடுத்த கவுன்சிலர் வரும் வரை பணி செய்வோம். புதிய கவுன்சிலர் வந்தாலும், இணைந்து செயல்படுவோம். என் ராஜினாமாவால் வார்டு மக்கள் திருப்தி தான். 35 ஆண்டுகளாக இந்த வார்டில் திமுக வெற்றி பெற்றதில்லை. 10 மாதத்தில் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்திருக்கிறேன்.
கேள்வி: எதிர்பார்ப்போடு வரும் இளைஞர்களுக்கு அரசியலில் ஏமாற்றம் தான் ஏற்படுகிறதா? இளைஞர்களுக்கு என்ன சொல்ல வர்றீங்க?
நர்மதா: நான் அரசியல் அறிவியல் படித்தவள். என் பார்வையில் அரசியல் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று உள்ளது. ஆனால் இங்குள்ள அரசியலில் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. அது என்னடைய பலவீனமாக கூட இருக்கலாம். இந்த அரசியலை ஏற்றுக்கொள்பவர்களுக்கு எதிர்காலம் இருக்கும். என்னை யாரும் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
கேள்வி: திக-திமுக கொள்கை கிட்டத்தட ஒரு மாதிரியானது தான். அரசியல்-ஆட்சி என வரும்போது கொள்கை மாறுபடுகிறதா?
நர்மதா: வித்தியாசம் இருந்து தான் ஆகணும். ஆட்சியில் இருப்பவர்களை குறைசொல்ல முடியாது. நான் ஒரு கடவுள் மறுப்பாளர். நான் கவுன்சிலராக, என் வார்டில் ஒரு கோயில் திருவிழா என்றால், நான் போய் அங்கு நின்று தான் ஆக வேண்டும். ராஜாஜி வந்த போது பெரியாரே திருநீர் வைத்துக் கொண்டவர் தான். அந்த மாதிரி சில விசயங்களை சமரசம் செய்து தான் ஆகவேண்டும். கொள்கையை அப்படியே ஆட்சியில் கொண்டு வர முடியாது. இல்லையென்றால் மக்களின் உணர்வுகளை பாதிப்பதாக ஆகிவிடும். கொள்கை வேறு, அரசியல் வேறு.
கேள்வி: உங்களுடைய ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதா?
நர்மதா: இதுவரை அதிகாரப்பூர்வமாக என் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல் வரவில்லை. சனி, ஞாயிறு என்பதால் காத்திருக்கிறேன். அமைச்சர் உதயநிதி கோவை வந்திருப்பதால் எல்லாரும் அதில் பிஸியாக உள்ளனர். திங்கள் தான் அதை தொடரவேண்டும்.
கேள்வி: ராஜினாவை கைவிடுமாறு யாரும் அழைத்து பேசவில்லையா?
நர்மதா: நான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லாததால் யாரும் என்னிடம் பேசவில்லை. அந்த மனநிலையிலும் நான் இல்லை. அப்பாவை சிலர் பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். அப்பா தான் பேசிக்கொண்டிருக்கிறார்.
கேள்வி: சமரசம் கை கொடுத்தால் ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்க வாய்ப்பு உள்ளதா?
கண்டிப்பாக இல்லை. எந்த காரணத்திற்காகவும் நான் கவுன்சிலராக தொடர மாட்டேன் .
இவ்வாறு நர்மதா, இந்துஸ்தான் டைம்ஸ் இணையதளத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
டாபிக்ஸ்