HBD Cho Ramaswamy: பிரதமர் நரேந்திர மோடி குறித்து முன்பே கணித்த அரசியல் சாணக்கியர் சோ ராமசாமி!
Oct 05, 2023, 05:00 AM IST
பின்னாட்களில் அரசியல் சாணக்கியர் என பெயர் வாங்கியவர். அரசியலை களத்தை உண்ணிப்பாக கவனித்து தனது துக்ளக் பத்திரிகையில் விமர்சித்து வந்தவர்.
சோ ராமசாமி என அழைக்கப்படும் சீனிவாச ஐயர் ராமசாமி, பிரபல நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், படத்தொகுப்பாளர், அரசியல் விமர்சகர், நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குநர் மற்றும் வழக்கறிஞர் என பன்முகத் திறமையாளர் ஆவார். 1960 மற்றும் 70களில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்த அவர், அந்த காலகட்டத்தில் அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார்.
நடிப்பு எனும் ஒரு வட்டத்துக்குள் அடங்காதவர். பின்னாட்களில் அரசியல் சாணக்கியர் என பெயர் வாங்கியவர். அரசியல் களத்தை உண்ணிப்பாக கவனித்து தனது துக்ளக் பத்திரிகையில் விமர்சித்து வந்தவர்.
பிறப்பு
சீனிவாச ஐயர் மற்றும் ராஜம்மாள் ஆகியோரின் மூத்த மகனான சோ சென்னையில் 1934ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி பிறந்தார். செளந்தரா என்பவரை திருமணம் செய்து கொண்ட சோவுக்கு ஸ்ரீராம் ராமசாமி மற்றும் சிந்துஜா என ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார் சோ. பகீரதன் எழுதிய தேன்மொழியாள் என்ற தமிழ் நாடகத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் 'சோ' என்பதாகும். பின்னாட்களில் அவரது பெயர் சோ என ஆகிப்போனதற்கு அந்தக் கதாபாத்திரமே காரணம்.
1963-ம் ஆண்டு ‘பார் மகளே பார்’ படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார் சோ. 1963 முதல் 2005 வரை 180 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். 20 நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார்.
இவர் 20க்கும் அதிகமான நாடகங்களை எழுதி நடித்துள்ளார். 10 நூல்களை எழுதியுள்ளார். நடிகராக மட்டுமல்லாமல், ஆயிரம் பொய், பணம் பத்தும் செய்யும் போன்ற படங்களின் திரைக்கதை மற்றும் கதாசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். இவை அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற படங்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
சோவும் மனோரமாவும் 20 படங்களில் இணைந்து நடித்தனர். நாகேஷுடன் தேன்மழை, நினைவில் நின்றவள், பொம்மலாட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தார் சோ.
ஒளி விளக்கு, கணவன், குமரிக்கோட்டம், மாட்டுக்கார வேலன், அடிமைப் பெண் போன்ற படங்களில் முன்னாள் தமிழக முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதாவுடன் நடித்தவர் சோ.
வெறும் நடிகராக மட்டும் இல்லாமல், இதழியல் பணியையும் ஆற்றியவர். துக்ளக் என்ற தமிழ் அரசியல் இதழை தொடங்கி அதன் ஆசிரியராக இருந்தவர்.
இந்திரா காந்தி, கருணாநிதி, சந்திரசேகர், ஜி.கே.மூப்பனார், எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயலலிதா, என்.டி.ராமாராவ், அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி, சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்ற அரசியல்வாதிகளை துக்ளக் தலையங்கத்தில் கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறார்.
தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி எதிர்காலத்தில் "இந்தியாவுக்கு மோடி பெருமை சேர்ப்பார்" என்றும் அவர் கணித்தார். சிறப்பான நிர்வாகத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்துள்ளார்.
இலக்கியம், கல்வி, இதழியல் பணிகளுக்காக பத்ம பூஷண் விருதை வழங்கி மத்திய அரசு இவரை கவுரவித்துள்ளது. அவரது மறைவுக்குப் பிறகே இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களவை உறுப்பினராகவும் இவர் இருந்திருக்கிறார்.
உடல் நலக் குறைவால் இவர் சென்னையில் 2016ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி காலமானார்.
டாபிக்ஸ்