தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பலே கில்லாடி தலைமறைவு.. 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர்..விசாரணையில் திடுக் தகவல்!

பலே கில்லாடி தலைமறைவு.. 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர்..விசாரணையில் திடுக் தகவல்!

Karthikeyan S HT Tamil

Dec 31, 2023, 09:49 AM IST

google News
Tirupur: திருப்பூரில் தனியாக வசித்து வந்த 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞரை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
Tirupur: திருப்பூரில் தனியாக வசித்து வந்த 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞரை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

Tirupur: திருப்பூரில் தனியாக வசித்து வந்த 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞரை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

திருப்பூரை சேர்ந்த தேவி ( 28) என்பவா் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீஷியனாக பணி புரியும் குணசேகரன் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, குணசேகரன் தேவியிடம் , கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கான உதவிகளை செய்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

மேலும் ஆசைவார்த்தைகள் கூறி தேவியை குணசேகரன் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, இருவரும் 3 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்த நிலையில் தேவி பெண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்துள்ளாா்.

இந்த நிலையில், குணசேகரன் நடவடிக்கையில் தேவிக்கு சந்தேகம் ஏற்பட்டு அவா் குறித்து விசாரணை நடத்திய போது, ஏற்கனவே குணசேகரன் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து குணசேகரனிடம் தட்டிக்கேட்டார். இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் குணசேகரனும், அவரது தாயும் சேர்ந்து தேவியை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.

இதையடுத்து இளம் பெண் தேவி திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் குணசேகரன் 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம், நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

தனியாக வசித்து வரும் பெண்கள், ஆதரவற்ற பெண்கள், விதவை பெண்களிடம் நெருங்கி பழகியதுடன், அவர்களிடம் தனது விசிட்டிங் கார்டை கொடுப்பதுடன், அந்த பெண்களின் செல்போன் நம்பர்களை வாங்கி வைத்து கொண்டு பேசி வந்துள்ளார்.

இதில் அவரிடம் மயங்கிய பெண்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று வந்துள்ளார். இதனிடையே கேரளாவை சேர்ந்த வனிதா என்ற பெண்ணை குணசேகரன் முறைப்படி திருமணம் செய்தார். அவர் மூலம் ஒரு குழந்தையும் உள்ளது. முதல் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை பிரிந்த குணசேகரன், அதன்பிறகு 2017ம் ஆண்டு திருப்பூர் பெருமாநல்லூரை சேர்ந்த கனகா என்பவரை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்துள்ளார். பின்னர் 2019ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த செல்லம்மாள், 2020 ஆம் ஆண்டு விழுப்புரத்தை சேர்ந்த சசிகலாவை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து திருப்பூரை சேர்ந்த காளீஸ்வரி, தேவியை திருமணம் செய்துள்ளார். மொத்தம் 6 பேரை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளாா்.

இதனிடையே 7 ஆவதாக சிவகங்கையை சேர்ந்த கல்லூரி மாணவி சினேகா என்பவருடன் பேஸ்புக் மூலம் பழகி அவரை திருமணம் செய்வதற்காகவே தேவியை வீட்டை விட்டு விரட்டியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில், தேவி போலீசில் புகார் செய்யவே குணசேகரன் தலைமறைவாகியுள்ளாா். இளம் பெண் அளித்த புகாரின் பேரில் 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட குணசேகரனை திருப்பூர் மாநகர காவல்துறையினா் தேடிவருகின்றனா்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி