TN Floods: முதல்வரிடம் போனில் பேசிய பிரதமர்! இதுதான் விவரம்!
Dec 24, 2023, 08:48 PM IST
”மத்திய அரசிடம் இருந்து உடனடி நிதி உதவியை கோரியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்”
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் கேட்டு அறிந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கடந்த டிசம்பர் 4ஆம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகளை சீர் செய்திடவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுடன் இணைந்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மழை வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசின் சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டு ஆய்வு செய்து இருந்தார். மேலும், மத்திய அரசு சார்பில் வெள்ள பாதிப்புகளை மத்திய குழு பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றது.
பின்னர் ஏற்பட்ட தென்மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்க கோரி கோரிக்கை வைத்தார். மேலும் தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் பார்வையிட உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் கேட்டு அறிந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைத்தளத்தில் இட்டுள்ள இடுகையில், மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் மைச்சாங் புயல் தாக்கிய உடனேயே தென் தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் குறித்து விசாரிக்க என்னை அழைத்தார்.
வளக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், மாநில அரசு மேற்கொண்ட பாரிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அவருக்கு விளக்கி, மத்திய அரசிடம் இருந்து உடனடி நிதி உதவியை நாடினேன். இந்த இரட்டை பேரிடர்களை சமாளிக்க மத்திய அரசின் ஆதரவை மாண்புமிகு பிரதமர் உறுதியளித்ததோடு, மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி. சீதாராமன் வெள்ள நிலைமையை மதிப்பீடு செய்தார் என தெரிவித்துள்ளார்.