12th Exam Result Date 2023: மே 8ல் பிளஸ் 2 தேர்வு முடிவு - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
Apr 26, 2023, 11:50 AM IST
12th Exam Result:தமிழகத்தில் மே 8ம் தேதி காலை 09.30 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நீட் தேர்வின்போது மாணவர்களின் மனநிலை பாதிக்கக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் தேர்வு முடிவு வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. உறுதி மொழி படிவத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு மெசேஜ் மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
முன்னதாக தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 225 மையங்களில் மொத்தம் 8.75 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் மொத்தம் 5 லட்சத்து 36 ஆயிரத்து 819 மாணவர்கள், வணிகவியல் பாடத்தில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 45 மாணவர்கள், கலை பாடப்பிரிவில் 14 ஆயிரத்து 162 மாணவர்கள், தொழிற்கல்வி பாடப்பிரிவில் 46 ஆயிரத்து 277 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதினர். சென்னையில் மட்டும் 180 மையங்களில் 45 ஆயிரத்து 982 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதினர்.
வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புழல் ஆகிய சிறைகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு சிறைவாசிகள் சிலரும் தேர்வு எழுதினர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு மையங்களில் தரைதளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்வுப் பணியில் அனைத்து நிலைகளிலும் தேர்வுத்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் தேர்வுக்கு 50 ஆயிரம் மாணவர்கள் வராதது. கேள்வித்தாளில் சில குளறுபடிகள், தேர்வு மையத்துக்கு பஸ் வசதிகள் சில இடங்களில் இல்லாதது என பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. தற்போது மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கல்வியாண்டுக்கான நீட் தேர்வுகள் நாடு முழுவதும் 499 மையங்களில் மே 7ம் தேதி நேரடியாக நடைபெறவுள்ளது. இத்தேர்வுகள் இந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் இத்தேர்வுகள் நடைபெறவுள்ளன.
இதனால், தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 5ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.
டாபிக்ஸ்