chennai: நகைக்கடை கொள்ளைக்கு பயன்படுத்திய இன்னோவா கார் புகைப்படம் வெளியானது!
Feb 11, 2023, 10:09 AM IST
சிசிடிவி காட்சிகளை மையமாக வைத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்
சென்னை பெரம்பூரில் செயல்பட்டு வரும் நகைக்கடை ஒன்றில் 9 கிலோ அளவிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய கார் குறித்த புகைப்படம் வெளியாகி உள்ளது.
சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள பேப்பர் மில் சாலையில் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான ஜே.எல்.கோல்டு பேலஸ் என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீதர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் இரவில் ஸ்ரீதரின் நகைக்கடையின் ஷட்டரை வெல்டிங் மெஷினால் வெட்டி கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதில் நகைக்கடையில் இருந்த சுமார் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியானது. மேலும் நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீதர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வியாசர்பாடி குற்றப்பிரிவு காவல்துறையினர் நகைக்கடை கொள்ளை குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய நிலையில் ஒரு கிராம் தங்கம் விலை மார்க்கெட்டில் சுமார் 43,000 வரை விற்பனை செய்யப்படும் நிலையில் பலகோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நகைக்கடையில் கொள்ளையடிக்க கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் குறித்த படம் வெளியாகி உள்ளது. அப்பகுதியில் இருந்து கிடைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதில் இரண்டைரை மணி நேரத்தில் கொள்ளை சம்பவம் நடைந்துள்ளது. கொள்ளையர்கள் முகமூடி அணிந்து வந்து கொள்ளையடித்து விட்டு இன்னோவா காரில் தப்பி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்ப ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை மையமாக வைத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
டாபிக்ஸ்