தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மிசா முதல் தடா வரை! சிறையிலேயே தனித்தமிழ் வளர்த்த பெருஞ்சித்திரனாரின் நினைவு தினம் இன்று!

மிசா முதல் தடா வரை! சிறையிலேயே தனித்தமிழ் வளர்த்த பெருஞ்சித்திரனாரின் நினைவு தினம் இன்று!

Kathiravan V HT Tamil

Jun 11, 2023, 05:45 AM IST

google News
”தமிழ் உணர்வுடன் எழுதிய பாடல்கள் காரணமாக 1973ஆம் ஆண்டு பாவாணரால் அவருக்கு ’பாவலரேறு’ என்ற பட்டம் வழங்கப்பட்டது”
”தமிழ் உணர்வுடன் எழுதிய பாடல்கள் காரணமாக 1973ஆம் ஆண்டு பாவாணரால் அவருக்கு ’பாவலரேறு’ என்ற பட்டம் வழங்கப்பட்டது”

”தமிழ் உணர்வுடன் எழுதிய பாடல்கள் காரணமாக 1973ஆம் ஆண்டு பாவாணரால் அவருக்கு ’பாவலரேறு’ என்ற பட்டம் வழங்கப்பட்டது”

தனித்தமிழறிஞர், புலவர், இதழாளர், பொதுவுடமை தமிழ்தேசிய செயல்பாட்டாளர் என பன்முகத் தன்மை கொண்ட பாவலரேறு பெருஞ்சித்தினாரின் இயற்பெயர் இராசமாணிக்கம் ஆகும். 1933ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரத்தை அடுத்த சமுத்திரம் எனும் சிற்றூரில் துரைசாமி-குஞ்சம்மாள் இணையருக்கு மகனாக பிறந்தார். இவரின் இயற்பெயரான இராசமாணிக்கம் என்பதை தனது தந்தை பெயரின் முன்னொட்டை இணைத்து துரை மாணிக்கம் என மாற்றிக் கொண்டார்.

கையெழுத்து இதழ்

தமிழின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தனது 10ஆம் வயதில் ’அருணமணி’ எனும் புனைப்பெயரில் ‘மலர்க்காடு’ எனும் கையெழுத்து இதழை நடத்தினார்.

சேலம் நகராண்மை கல்லூரியில் தேவநேயப்பாவாணர், காமாட்சி குமாரசாமி உள்ளிட்டோரின் மாணவராக இருந்து தமிழ் பயின்ற அவர் பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளை மிகுந்த ஆர்வத்தோடு படித்தார்.

புனைப்பெயரில் இதழியல் பணி

1959ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அகரமுதலித் துறையில் பணியாற்றத் தொடங்கிய அவர், தென்மொழி என்ற இதழை தனியாக தொடங்கினார். அரசுப்பணியில் இருந்ததால் தனது துரை மாணிக்கம் என்ற பெயரை விடுத்து பெருஞ்சித்திரன் எனும் புனைப்பெயரில் எழுதத் தொடங்கினார்.

இந்தி எதிர்ப்பு போரில் சிறை 

இளமைக்காலம் தொட்டே பெரியாரிய மற்றும் பொதுவுடமை சிந்தனைகள் மீது ஆர்வம் கொண்ட அவர் 1965ஆம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதுடன் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் பக்தவசலத்திற்கு எதிராக பாடலை எழுதியதால் வேலூர் சிறையில் 1965 நவம்பர் 17 தொடங்கி 1966 ஜனவரி 16 வரை அடைக்கப்பட்டார். இதனால் அவரது அரசுப்பணி பறிக்கப்பட்டது, தனது சிறை வாழ்கையில் ‘ஐயை’ எனும் தனித்தமிழ்ப்பாவியத்தின் முதல் தொகுதியை இயற்றினார்.

மிசா முதல் தடா வரை தொடர் சிறை

1975ஆம் ஆண்டில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை காரணமாக மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட போது ‘ஐயை’ நூலின் இரண்டாம் பகுதியை இயற்றி முடித்தார்.

1993ஆம் ஆண்டு தடா சட்டத்தின் கீழ் ஏழு மாதம் சிறையில் அடைக்கப்பட்ட அவர், தனது வாழ்நாளில் 20க்கும் மேற்பட்ட முறை சிறைக்கு சென்றுள்ளார்.

தமிழ் வளர்ச்சி பணிகள்

தமிழ் உணர்வுடன் எழுதிய பாடல்கள் காரணமாக 1973ஆம் ஆண்டு பாவாணரால் அவருக்கு ’பாவலரேறு’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் தமிழ் வளர்ப்பு பணிகளை மேற்கொண்ட அவர், 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். தமிழீழ விடுதலைக்காக தொடந்து குரல் கொடுத்து வந்த அவர், தமிழ்நாடு விடுதலைப்படையை உருவாக்கிய பொன்பரப்பி தமிழரசன் உடன் நட்பு கொண்டிருந்தார்.

இந்தியாவில் விடுதலை புலிகள் அமைப்பின் தடைக்கு எதிராக அவர் எழுதிய

”இதோ ஒருவன் நான் இங்கிருக்கின்றேன்

எனைச்சிறை செய்யினும் செய்க!

ஈழத்தமிழரை ஆதரிக்கின்றேன்

என் தலை கொய்யினும் கொய்க” அவரது ஆதரவாளர்களால் பெரும் வரவேற்பை பெற்றது.

மறைவு 

தொடர் உடல்நலக்குறைவு காரணமாக 1995ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி சென்னை தியாகரய நகரில் உள்ள இல்லத்தில் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி