சுதந்திர தினத்தில் பிறந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இன்று வயது 45
Aug 15, 2022, 11:13 AM IST
1977ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று முதல் மதுரை- சென்னை இடையே இயங்கிவரும் வைகை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
மதுரை: நாடு முழுவதும் 75-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை மக்கள் தத்தம் வீடுகளில் கொடி ஏற்றி வைத்து வெகு விமரிசையாகக் கொண்டாடிவரும் நிலையில், தமிழக தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாகத் திகழும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 45-ஆவது பிறந்தநாளை இன்று ரயில் பயணிகள் கேக் வெட்டியும், சிறப்பு பூஜைகள் செய்தும், ரயில் ஓட்டுனருக்கு மரியாதை செய்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
கடந்த 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வைகை அதிவிரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. மதுரை- சென்னை மார்க்கத்தில் பகல் நேர அதிவிரைவு ரயிலாக இயங்கியது.
சென்னையிலிருந்து வணிகப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கும், பிற அலுவல்களுக்கும் தென் மாவட்ட வணிகர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் அமைந்தது.
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டபோது மீட்டர் கேஜ் இருப்புப் பாதைதான் இருந்தது. அந்த மீட்டர் கேஜ் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்ற இந்தியாவின் அதி விரைவு ரயில் என்ற பெருமையை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பெற்றது.
அதுமட்டுமல்லாமல் ஆசியாவிலேயே மீட்டர் கேஜில் அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில் என்ற பெருமையும் வைகை எக்ஸ்பிரஸ்க்கு உண்டு.
மதுரையில் இருந்து முன்பு 6.45 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. பின்னர் ரயிலின் வேகம் கூட்டப்பட்டது. அகலப்பாதை அமைக்கப்பட்டவுடன் மணிக்கு 130 கி.மீட்டர் வேகத்துக்கு தற்போது செல்கிறது.
நாள்தோறும் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.35 மணிக்கு சென்னையை சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 25 நிமிடங்கள். அதேபோன்று மறு மார்க்கமாக சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் மதுரை வந்தடையும். இதில் மொத்த பயண நேரம் 7 மணி 35 நிமிடங்கள் ஆகும்.
வைகை எக்ஸ்பிரஸ் தொடங்கப்பட்டபோது அதன் எஞ்சின் மற்றும் பெட்டிகள் அனைத்தும் மேலாக பச்சை பட்டையும் கீழ்புறமாக மஞ்சள் நிறத்திலும் வர்ணம் பூசப்பட்டிருக்கும். அப்போதெல்லாம் சிவப்பு நிறத்தில் தான் அனைத்து ரயில்களும் இருக்கும். பாண்டியன் எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பச்சை நிறத்தில் மஞ்சள் கோடு போட்ட வண்ணத்தில் இருக்கும்.
அதிவேகத்தில் செல்லும் மஞ்சள் பச்சை நிற வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்றைக்கும் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறது.