Loksabha Election 2024: ’திமுக கொடுக்குமா? கெடுக்குமா?’ மதிமுக, கம்யூ. உடன் இன்று கூட்டணி பேச்சுவார்த்தை!
Feb 29, 2024, 05:32 PM IST
“ஏற்கெனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்ற நிலையில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் இன்றே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது”
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உடன் திமுக இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு வரும் மார்ச் மாதத்தில் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருந்து வருகிறது.
இதில் ஏற்கெனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்து தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த நிலையில் மதிமுக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் இன்று திமுக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அக்கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்ற நிலையில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் இன்றே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விசிகவுக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு பொதுத்தொகுதி உட்பட 4 தொகுதிகளை விசிக கேட்டுள்ளது.
கடந்த தேர்தலில் ஈரோடு மக்களவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட்டு வென்றது. வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் தரப்பட்டது. இந்த நிலையில் விருதுநகர், திருச்சி, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய 6 தொகுதிகளை தமது விருப்பத் தொகுதிகளாக மதிமுக கேட்டுள்ளது. மேலும் இந்த தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது.
அதே போல் கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.