Parandhur Airport : முழுக்க முழுக்க நீர்நிலைகளையே ஆக்கிரமித்து அமையும் பரந்தூர் விமான நிலையம் – வரைபடம் வெளியீடு!
Mar 04, 2024, 06:16 PM IST
Parandhur Airport : முழுக்க முழுக்க நீர்நிலைகளையே ஆக்கிரமித்து அமையும் பரந்தூர் விமான நிலையம் – வரைபடம் வெளியீடு!
பரந்தூரில் விமானநிலையம் அமைக்க உள்ளூர் 13 கிராம பஞ்சாயத்துகள் எதிர்ப்பு தெரிவித்து, விமான நிலையம் தேவையில்லை எனத் தீர்மானம் எடுத்துள்ள நிலையிலும் தமிழக அரசு அதைத் துளியும் மதிக்காமல் விமானநிலையம் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு உள்ளூர் விஷயங்களை தீர்மானிக்க அதிகாரம் இல்லையெனில் கிராம சுயராஜ்யம் (பஞ்சாயத்து ராஜ்) சட்டப்படி பேசுவதால் எந்த பயனும் இல்லை.
(சமீபத்தில் கிராம பஞ்சாயத்துகள் தங்கள் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைவதை தடுக்க முடியாது என சட்டத்திருத்தம் தமிழகத்தில் நிறைவேறியுள்ளது. இதற்கு முன் கிராமப் பஞ்சாயத்துகளின் அனுமதியின்றி தொழிற்சாலைகளை உள்ளூரில் அமைக்க முடியாது என இருந்தது மாற்றப்பட்டுள்ளது) அதற்கு பதில் தொழிற்துறை சார்ந்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு அவரே தொழிற்சாலை அமைவது குறித்து முடிவெடுப்பார் என மாற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்தம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்படியானால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பஞ்சாயத்தார்களின் அதிகாரம் பறிபோவதை எப்படி மக்கள் ஏற்க முடியும்?
5,000 ஏக்கர் பரப்பில் அமையவிருக்கும் விமானநிலையப் பகுதியில் 2682.62 ஏக்கர் பரப்பு ஈரநிலங்கள் உள்ள பரப்பாகும்.
ஈரநிலங்கள் கார்பன் சேமிப்பு வங்கிகளாக செயல்பட்டு (ஒரு ஏக்கர் ஈரநிலம் 81-216 மெட்ரிக் டன் கார்பனை சேமிக்கும் திறன் கொண்டது) புவிவெப்பமடைதலை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
தமிழக அரசு ஈரநிலங்களுக்கு பாதிப்பில்லாமல் விமானநிலையம் அமைக்கப்படும் என்ற உத்தரவாதத்தைக் கொடுத்தாலும், அரசின் தற்போது வெளிவந்திருக்கும் வரைபடத்தை பார்த்தால், முக்கிய ஏரியான நெல்வாய் ஏரி உட்பட பல சிறு நீர்நிலைகள், (வரைபடத்தை பார்த்தால் ஏறக்குறைய விமான நிலையத்தின் பாதி பரப்பு) முற்றிலுமாக பாதிக்கப்பட உள்ளதை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.
விமானநிலையப் பணிகளுக்கு தேவைப்படும் ஓடுதளம், இணையாக ஓடும் 2 ஓடுதளங்களை வாகனங்கள் சென்று இணைக்கும் பாதை, விமானங்கள் நிற்கும் இடங்கள், கடைசிக் கட்டிடம் (Terminal Building), விமானங்களை அடைய மக்கள் வாகனம் மூலம் செல்லும்பாதை, எரிபொருள் நிரப்பும் இடங்கள் (Apron area) போன்றவை அனைத்தும் நீர்நிலைகள் இருக்கும் இடங்களிலே தான் அமைக்கப்படவுள்ளன. (பார்க்க-வரைபடம்).
அப்பகுதியில் உள்ள மிகப் பெரிய ஏரியான நெல்வாய் ஏரி, நகரை நோக்கி இருக்கும் விமானநிலையப் பகுதியில் இருப்பதோடு, சென்னை-பெங்களூரு விரைவுப் பாதையை இணைக்கும் சாலை, விமானநிலையத்திற்கு வர இருக்கும் மெட்ரோ ரயில் பாதை இவை அனைத்தும் நெல்வாய் ஏரியில் தான் அமையவுள்ளன.
விமானநிலையம் அமைக்கப்படவுள்ள ஒரு இடத்தில் மழைநீர் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் பெய்யும் மழைநீரை வடிகால் அமைப்புகள் மூலம் சேகரித்து அதை எப்படி அதிக பாதிப்பில்லாமல் கையாளுவது எனத் திட்டமிடல் இருந்தாலும், விமானநிலையப் பணிகள் மேற்கொள்ளும் இடத்திலுள்ள அக்கம்மாபுரம் குளம், ஏகனாபுரம், கடப்பன்தாங்கல், மகாதேவமங்களம் குளம், மகாதேவமங்களம் தாங்கல், ஏகனாபுரம் ஏரி, ஏகனாபுரம் கல் ஏரியின் ஒருபகுதி இவற்றில் விமானநிலையம் அமைவதால் அவை மோசமான பாதிப்பிற்கு ஆளாகும்.
மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நெல்வாய் ஏரிப்பகுதி ஆக்கிரமிக்கப்படுவதால், அதை ஆழமாக்கி, மறுசீரமைப்பு செய்து ஏரியின் நீர் கொள்ளளவை அதிகப்படுத்த திட்டங்கள் உள்ளன.
விமானநிலையப் பகுதியில் பெய்யும் மழைநீரை கால்வாய்கள் மூலம் ஓரமாகக் கொண்டுவந்து நெல்வாய் ஏரியில் இறுதியில் கலக்கும் திட்டங்கள் உள்ளது.
நெல்வாய் எரியில் உபரிநீர் இருந்தால், அந்நீரை விமானநிலையத்தின் கிழக்குப் பகுதியில் திருப்பிவிட்டு, பின்னர் சென்னை-பெங்களூரு விரைவுச் சாலைகளில் உள்ள வடிகால் அமைப்புகளிலும், அருகில் உள்ள பிற நீர்நிலைகளிலும் திருப்பிவிட திட்டங்கள் உள்ளது.
நெல்வாய் ஏரி பாதிப்பை குறைக்கவும், அதை விமானநிலையப் பணிகளுக்கு பயன்படுத்தவும் திட்டங்கள் உள்ளன.
தமிழக அரசு, நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் விமானநிலையம் அமைக்க குழு ஒன்றை அமைத்தாலும், நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைக் காக்காமலும், உள்ளூர் பஞ்சாயத்து அமைப்புகளின் தீர்மானங்களை துளியும் மதிக்காமலும் இருப்பது, அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவது உறுதியாகிறது.
பரந்தூர் விமானநிலையம் அமைக்க, அரசு அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, நீர்நிலைகள் மற்றும் செழிப்பான விவசாய நிலங்களை காக்க முன்வருமா?
நன்றி – மருத்துவர். புகழேந்தி
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்