OPS: அதிமுக பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை! நீதிமன்றம் சென்ற ஓபிஎஸ்! உடனே ஓகே சொன்ன நீதிபதிகள்!
Nov 08, 2023, 11:15 AM IST
”ஓபிஎஸின் மனு வரும் 10ஆம் தேதி அன்று விசாரணைக்கு வருகிறது”
அதிமுகவின் பெயர், கட்சி, கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் கட்சி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி கடந்த செப்டம்பர் மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை முதலில் இடைக்கால தடையை விதிக்க வேண்டும் என அவர் கோரி இருந்தார்.
இது தொடர்பான விசாரணை நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தபோது அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி வாதிட்டார். அப்போது “இதுவரை ஓபிஎஸ் தரப்பு பதில் மனுத்தாக்கல் செய்யவில்லை என்றும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு கொண்டு வர இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கூறி வாதிட்டார்.
ஓபிஎஸை கட்சியில் இருந்து நீக்கியதற்கு எதிரான மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் குறுகிய கால அவகாசம் வேண்டும். தீபாவளி முடிந்த பிறகு எங்கள் தரப்பில் இருந்து பதில் மனுவை தாக்கல் செய்வோம் என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ராஜலட்சுமி கூறி இருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக தரப்பு வழக்கறிஞர், 5 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் மக்களிடமும், கட்சியினர் இடமும் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் அறிக்கை விட்டு வருவதாக வாதிட்டார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, எத்தனை முறைதான் மாற்றி மாற்றி வழக்குகளை தொடர்ந்து கொண்டு இருப்பீர்கள் என கேள்வி எழுப்பியதுடன், பிஎஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் இதுவரை எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்காததால் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பதில் மனுத்தாக்கல் செய்யும் வரை இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் இதை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் வரும் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விசாரிப்பதாக கூறி உள்ளனர்.