தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Online Rummy : '15 நாட்களில் 5 பேர் விபரீத முடிவு.. அரசு இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்' அன்பு மணி வலியுறுத்தல்

Online Rummy : '15 நாட்களில் 5 பேர் விபரீத முடிவு.. அரசு இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்' அன்பு மணி வலியுறுத்தல்

May 30, 2024, 01:52 PM IST

google News
Anbumani Ramadoss : ஒவ்வொரு தற்கொலையின் போதும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழக அரசு இன்னும் உறக்கத்திலிருந்து விழிக்க வில்லை. தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெற வேண்டும்.
Anbumani Ramadoss : ஒவ்வொரு தற்கொலையின் போதும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழக அரசு இன்னும் உறக்கத்திலிருந்து விழிக்க வில்லை. தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெற வேண்டும்.

Anbumani Ramadoss : ஒவ்வொரு தற்கொலையின் போதும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழக அரசு இன்னும் உறக்கத்திலிருந்து விழிக்க வில்லை. தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெற வேண்டும்.

Anbumani Ramadoss : 15 நாட்களில் 5 பேர் ஆன்லைன் ரம்மி காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிலையில் தமிழக அரசு விழித்துக்கொண்டு மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

லட்சக்கணக்கில் பணம் இழப்பு

"தஞ்சாவூர் மாவட்ட சுவாமிமலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் பணியாற்றி வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த தினசீலன் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவும், மீள முடியாத கடன்சுமை காரணமாகவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தினசீலனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் ரம்மி என்பது ஆக்டபசின் கரங்களைப் போல, அதை விளையாடத் தொடங்குபவர்களை சுற்றி வளைக்கக் கூடியது என்பதற்கு தினசீலனின் செயல்கள் தான் எடுத்துக்காட்டு ஆகும். மயிலாடுதுறையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி ஆன்லைன் ரம்மியில் தினசீலன் இழந்துள்ளார். 

பணத்தைக் கடனாகக் கொடுத்தவர்கள், அந்த பணத்தை திரும்பக் கேட்டதால் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தினசீலனின் குடும்பத்தினர், சம்பந்தப்பட்டவர்களிடம் சமாதானம் பேசி தினசீலனை மீட்டுள்ளனர். அதன்பின்னர் அவரை சில மாதங்களுக்கு முன் சுவாமிமலையில் தங்கும் விடுதியில் பணியில் சேர்த்துள்ளனர். ஆனால், அங்கும் விடுதியின் வருமானத்தை எடுத்து ஆன்லைன் ரம்மி விளையாடி இழந்துள்ளார். அதன் பிறகு மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம்

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ஆம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மிகவும் அரிதாக நிகழ்ந்து வந்த தற்கொலைகள் இப்போது தொடர்கதையாகி விட்டன. கடந்த மே 14-ஆம் தேதி முதல் மே 29 வரையிலான 15 நாட்களில் 5 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் ஒவ்வொரு நாளும் ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் நிகழ்வதைத் தடுக்க முடியாது.

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு கடந்த 6 மாதங்களில் மொத்தம் 12 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் பாதி பேர், அதாவது 6 பேர் கடந்த மாதம் 29-ஆம் தேதிக்கும், மே மாதம் 29-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட ஒரு மாதத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதிலிருந்தே ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் எவ்வளவு வேகமாக அதிகரித்து வருகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

மக்களைக் காக்க வேண்டும்

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதன்பின் 6 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. ஒவ்வொரு தற்கொலையின் போதும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழக அரசு இன்னும் உறக்கத்திலிருந்து விழிக்க வில்லை. 

தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெற வேண்டும்; அதன் மூலம் தற்கொலைகளில் இருந்து மக்களைக் காக்க வேண்டும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி