RK Narayan Death Anniversary : மால்குடியை உருவாக்கியவர்.. நாவல் ஆசிரியர் ஆர்.கே.நாராயணன் நினைவுநாள் இன்று!
May 13, 2023, 05:15 AM IST
மால்குடியை உருவாக்கிய நாவல் ஆசிரியர் ஆர்.கே.நாராயணன் நினைவுநாளான இன்று அவரை நினைவு கூறுவோம்.
ஆர்.கே.நாராயண் சென்னை புரசைவாக்கத்தில் 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி பிறந்தார். ஆங்கில மொழியிலேயே தன்னுடைய புத்தகங்களை எழுதிய ஆர்.கே.நாராயண், தன்னுடைய கல்லூரி நுழைவுத்தேர்வில் ஆங்கிலத்திலேயே தோல்வியடைந்தார் என்பது ஆச்சரியம் தான். படித்து முடித்தவுடன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். பணியில் சேர்ந்த 5 நாள்களிலேயே வேலையை விட்டுவிட்டு எழுதத் தொடங்கினார்.
சிறுவயது முதலே படிப்பதில் மிகவும் ஆர்வம்கொண்டவர். ஒரு நாளைக்குக் கிட்டத்த 2,000 சொற்கள் வரை எழுதக்கூடியவர். அப்படி எழுதியதைத் திரும்பத் திரும்பப் படித்துத் திருத்துவாராம். எழுதுவதில் எந்தவிதச் சிரமும் இவருக்கு இருந்ததில்லை என இவரே சொல்வார். அப்பா பள்ளி ஆசிரியர். அவர் வேலை பார்த்து வந்த பள்ளியிலே நாராயண் படித்தார். கல்லூரி இளங்கலை நுழைவுத் தேர்வில் இருமுறை தோல்வி. ஆசிரியர் வேலை சலித்துப்போக அப்போது பேனாவுடன் அமர்ந்தவரிடம் உருவானதுதான் மால்குடி டேஸ்.
சுவாமி என்னும் சிறுவன் மற்றும் அவனது நண்பர்களை மையமாகக் கொண்டது சுவாமி ஆண்ட் ஃப்ரெண்ட்ஸ் நாவல். சுவாமி நம்மைப் போன்ற சாதாரண ஒரு சிறுவன். இந்த நாவலில் வரும் மால்குடியைத் தேடி அலையாத மனங்கள் இருக்காது. மால்குடி என்ற ஊர் உண்மையில் கிடையாது என்பதெல்லாம் அவரின் வாசகர்களுக்குப் ஏமாற்றம் தான்.
மால்குடி உருவானது குறித்து ஒரு நேர்காணலில் ஆர்.கே.நாராயணன் கூறியிருப்பார். அதில், ”ஒரு சின்ன ரயில்நிலையம் இருக்க வேண்டும். அதில் சில மரங்கள் இருக்க வேண்டும். அங்கு ஸ்டேஷன் மாஸ்டர் இருக்க வேண்டும். இந்த ரயில் நிலையத்துக்கு சுவாமியும் அவனது நண்பர்களும் அடிக்கடி சென்று வருவார்கள். இந்த ரயில்நிலையம் உண்மையில் இல்லாத ஊரின் பெயராக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடியையும், கும்பகோணத்துக்கு அருகில் உள்ள மாங்குடியையும் சேர்த்து மால்குடி என்று உருவாக்கினேன்” என கூறியிருப்பார்.
இவரின் முதல் கதை வேர்க்கடலை உண்ண பாக்கெட் மணி இல்லாமல் அலையும் சிறுவனைப் பற்றியது. அக்கதைக்கு அவர் பெற்ற சன்மானம் 10 ரூபாய். வருமானம் பெரிதாக இல்லாமல் இருந்த சூழலில் அவரின் ஸ்வாமி அண்ட் ஃப்ரண்ட்ஸ் நாவல் ஆக்ஸ்போர்டில் படித்துக்கொண்டிருந்த அவரின் நண்பன் கிட்டு பூர்ணாவின் மூலம் பிரபல எழுத்தாளர் கிரஹாம் க்ரீன் வசம் போனது. அவர் அதை ஹாமிஷ் ஹாமில்டன் பதிப்பகத்தில் வெளியிட செய்தார்.
அதன்பிறகு The Bachelor of arts, The Dark Room, The English Teacher, The Guide, Under the banyan tree உட்பட பத்துக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய The Guide நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார். My days என்று தனது நினைவுகளையும் ஒரு நூலாக எழுதியுள்ளார். சிறுகதை, கட்டுரை எனப் பல வடிவங்களில் எழுதினாலும் சிறந்த நாவலாசிரியராகவே அறியப்பட்டார்.
வீணை வாசிப்பில் ஆர்வம் கொண்டவர். மகாபாரதம், ராமாயணம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் சுருக்கமாக எழுதியிருக்கிறார். அவரின் அமெரிக்க அனுபவங்களை My Dateless Diary என்றும், நினைவலைகளை My Days என்றும் பதிவு செய்துள்ளார். மால்குடி டேஸ் கதைகள் ஷங்கர் நாக் என்பவரால் தொலைக்காட்சி தொடர் ஆக்கப்பட்டது. தேவ் ஆனந்தின் நவ்கேதன் தயாரிப்பு நிறுவனம் ‘தி கைட்’ நாவலை ஹிந்தியில் படமாக எடுத்தது.
கோவையில் சகோதரியின் வீட்டிலிருந்தபோது கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த ராஜம் மீது காதல் கொண்டார். முதலில் அவரது தந்தையை நட்பு பிடித்தவர், பின்பு ராஜத்தை திருமணம் செய்து கொண்டார். காந்தியின் சில கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்Waiting for the Mahatma என்ற நூலை எழுதினார். மேலும், இந்திரா காந்தி இவருடைய வாசகர். இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு நண்பர்களாகவே இருந்தனர். இந்திரா காந்தி நாராயணை கௌரவிக்கும் வகையில் ராஜ்யசபா உறுப்பினராக்கினார்.
கார்ட்டூனிஸ்ட் லக்ஷ்மண் இவரது இளைய சகோதரர். இருவருக்கும் 18 வருடங்கள் இடைவெளி. நாராயண் எல்லோரையும் சமமாக நடத்தும் பண்பு கொண்டவர். அவரது எழுத்துப் பயணமும் அரை நூற்றாண்டைக் கடந்தது. இன்று இவரின் நினைவுநாள்.இந்நாளில் அவரை நினைவுகூறுவோம்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்