School Holiday: வெளுத்து வாங்கும் கனமழை..இந்த 3 மாவட்டங்களில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை!
Dec 18, 2023, 08:42 PM IST
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் நாளையும் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரியில் தொடர்ந்து அதி கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் 93.2 செ.மீட்டர் அதி கனமழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்செந்தூரில் 67.9 செ.மீ மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது.
இந்த நிலையில், நாளையும் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் நாளை (டிச.19) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லையில் வெள்ள பாதிப்பு தொடரும் நிலையில் வங்கிகள், அரசு, தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளையும் (டிச.19) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என அந்த மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறாா்.
இதனிடையே, கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை (டிச.19) நடைபெற இருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் அறிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9